Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து 16 தொழிலாளர் உயிரிழப்பு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

மகாராஷ்டிராவில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 பெண்கள் உட்பட 16 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள யாவல் பகுதியில் மொத்த வியாபார அங்காடி இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கூலித் தொழிலாளர்கள் வந்து பழங்கள், காய்கறிகளை ஏற்றிச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, பப்பாளி பழங்களை ஏற்றிச் செல்வதற்காக, அதே மாவட்டத்தில் உள்ள ரவர் பகுதியில் இருந்து சரக்கு லாரி ஒன்று வந்தது. அதில் 20 கூலித் தொழிலாளர்கள் இருந்தனர்.

பப்பாளி பழங்களை லாரியில் ஏற்றிய பின்னர், கூலித் தொழிலாளர்களுடன் ரவர் பகுதியை நோக்கி லாரி மீண்டும் புறப்பட்டுச் சென்றது.இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் கிங்கோன் கிராமம் அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதனைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள், உடனடியாக அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், லாரிக்கும், பழங்களுக்கும் அடியில் சிக்கிய தொழிலாளர்களை அவர்களால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து, போலீஸார் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதில், 6 பெண்கள் உட்பட 16 கூலித் தொழிலாளர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து யாவல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x