Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

எங்கும், எந்த நேரமும் போராட்டம் நடத்த முடியாது ஷாகின் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எங்கும், எந்த நேரமும் போராட்டம் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தசட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தலைநகர் டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2019 டிசம்பர் 14-ம்தேதி முதல் 2020 மார்ச் 24-ம்தேதி வரை தர்ணா நடத்தப்பட்டது. அப்போது 2020 பிப்ரவரியில் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் வெடித்து 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டபோது ஷாகின் பாக் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக ஷாகின் பாக்கில் தர்ணா நடைபெற்றபோது அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. அலுவலகம், பள்ளி, கல்லூரி, அன்றாட அலுவல்களுக்கு செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றம் தடை விதிக்கமறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி அமர்வுவிசாரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

"போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. எனினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும். பொது இடங்களை, சாலைகளை காலவரையின்றி ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம். சாலைகளை யார் ஆக்கிரமித்தாலும் சம்பந்தப்பட்ட அரசுநிர்வாகங்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கனிஷ் பாத்திமா உட்பட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். இதனை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

போராட்டம் நடத்துவதற்கும், எதிர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கும் அரசமைப்பு சாசனம் வழிவகை செய்கிறது. எனினும் இதில் சில கடமைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. எங்கும்,எந்த நேரமும் போராட்டம் நடத்த முடியாது. சூழ்நிலைகளின் காரணமாக திடீரென போராட்டங்கள் நடைபெறலாம்.

ஆனால் பொது இடத்தை ஆக்கிரமித்து, அடுத்தவர்களின் உரிமைகளைப் பறித்து நீண்ட காலம் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x