Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

எல்லைப் பிரச்சினையில் சீனாவை எதிர்த்து நிற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை ராகுல் காந்தி விமர்சனத்துக்கு பாஜக கடும் கண்டனம்

‘‘சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து நிற்க பிரதமர் மோடிக்கு துணிவில்லை. அவர் கோழையாக இருக்கிறார்’’ என்று காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராகுல் கூறியதாவது:

இந்திய நிலப்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பை பிரதமர் மோடிநிறைவேற்றவில்லை. அதற்கு பதில்இந்திய நிலப்பரப்புகளை சீனாவுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறார். சீனாவின் அத்துமீறல் களை எதிர்த்து நிற்க துணிவின்றி பிரதமர் மோடி கோழையாக இருக்கிறார். நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை கேவலப்படுத்துகிறார். அவர்களின் தியாகங்களுக்கு துரோகம் இழைக்கிறார். இப்படி செய்வதற்கு இந்தியாவில் யாரையும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுலின் கருத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறும்போது, ‘‘இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்கு தாரை வார்த்தது யார் என்று அவரது (ராகுல்) தாத்தாவை (நேரு) கேட்க சொல்லுங்கள். அப்போது அவருக்கு பதில் கிடைக்கும். தேசப்பற்றுள்ளவர்கள் யார், தேசப்பற்று இல்லாதவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும் ’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியைப் பற்றி ராகுல் காந்தி கூறிய வார்த்தைகள் தரக்குறைவானவை, முதிர்ச்சியற்றவை. நாட்டின் நிலைமை, வரலாறு எதையும் அவர் புரிந்து கொள்வதும் இல்லை,புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை’’ என்று கண்டனம் தெரிவித்தார்.

எல்லைப் பகுதிகளில் பாங்காங் ஏரி பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெற்றுக் கொள்ள 2 நாட்களுக்கு முன்னர் இந்தியா - சீனா ஒப்பந்தம் முடிவானது. இந்நிலையில், மோடியை ராகுல் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எந்த பகுதியையும் விட்டு கொடுக்கவில்லை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம்

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு இடையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே, பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், சீனாவுக்கு விட்டுக் கொடுக்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும், பாங்காங் ஏரி பகுதியில், ‘பிங்கர் 4’ வரை இந்தியாவுக்கு உட்பட்டது. ஆனால், ‘பிங்கர் 3’ பகுதிக்கு படைகளை வாபஸ் பெற இந்தியா ஒப்புக் கொண்டது ஏன் என்று சிலர் (ராகுல் காந்தி) கேள்வி எழுப்பி உள்ளனர். உண்மையில் பிங்கர் 4 வரை இந்திய பகுதி என்பதே தவறான தகவல். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ‘பிங்கர் 8’ என்ற பகுதி வரை இந்தியாவுக்கு சொந்தமானது. ஆனால், பாங்காங் ஏரியின் ‘பிங்கர் 3’ பகுதி வரை இந்திய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ‘பிங்கர் 8’பகுதிக்கு கிழக்கு பகுதி வரை சீனா படைகளை நிலைநிறுத்தி உள்ளது.இதுதான் உண்மை. இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x