Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு கருத்துகள் ட்விட்டர், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் போலி செய்திகள், வெறுப்புணர்வு, அவதூறு கருத்துக்களை கண்டறிந்து நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் வினித் கோயங்காமனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டரில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்று வருகின்றன. இதைத் தடுக்க ட்விட்டர் நிர்வாகம் போதிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று வினித் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து மத்திய அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதே கருத்தை வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் துபே உள்ளிட்டோர் தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதித்துநடக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைகளை அந்த நிறுவனங்கள் சந்திக்க வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

ட்விட்டருக்கு மத்திய அரசு கேள்வி

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வன்முறையைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் பலர் பயன்படுத்திய போது, அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியது. இந்த தாமதம் எங்களை பெரும் அதிருப்தி அடைய செய்துள்ளது. அமெரிக்காவின் கேபிடோல் ஹில் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தின்போது, ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால், இந்தியாவின் செங்கோட்டை விவகாரத்தில் அப்படி செயல்படவில்லை. இரு சம்பவங்களில் ட்விட்டரிpf வெவ்வேறு நிலைப்பாடும் எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. இங்கு, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு, இந்தியாவில் தொழில் செய்யும் எந்தவொரு வணிக நிறுவனமும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

மத்திய அரசு மீண்டும் எச்சரித்த பின்னர் சர்ச்சைக்குரிய 97 சதவீத கணக்குகளை ட்விட்டர் முடக்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x