Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

அரசியல் தீண்டாமையில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

அரசியல் தீண்டாமையில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை; நாட்டைஇயக்குவதில் ஒருமித்த கருத்துக்கு பாஜக மதிப்பளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தை நிறுவியபண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 53-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜக எப்போதும் அரசியலைவிட நாட்டையே மேலாக கருதுகிறது. அரசியல் போட்டியாளர்களுக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு தற்போதைய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு முன்னாள் முதல்வர்களான அசாமின் தருண் கோகோய், நாகாலாந்தின் எஸ்.சி.ஜமீர் ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் அரசு இயங்கலாம். ஆனால் ஒருமித்த கருத்துடனேயே தேசம் இயங்குகிறது. அரசியல் தீண்டாமையில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை நாட்டை ஆள்வதில் ஒருமித்த கருத்துக்கு பாஜக மதிப்பளித்து வருகிறது.

சுபாஷ் சந்திர போஸ், பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தேசத் தலைவர்களுக்கு, வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாத அளவு எனது அரசு மரியாதை செய்துள்ளது. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தை ஊக்கவிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இவற்றுக்கு, தீனதயாள் உபாத்யாயவின் கொள்கைகளான மிகவும் பின்தங்கியவர்களை அதிகாரம் பெறச் செய்வது, ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகியவையே உந்துசக்தியாக உள்ளது.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு நெருக்குதலுக்கும் வளைந்து கொடுக்காமல் ‘முதலில் தேசம்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. நாடு 75-வது சுதந்திர தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாடவுள்ள வேளையில், சமூக நலனுக்கான 75 பணிகளை நாடு முழுவதிலும் உள்ள கட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x