Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

தெலங்கானாவில் கால்வாயில் கார் பாய்ந்து ஆசிரியை உட்பட 2 பேர் உயிரிழப்பு

வாரங்கல்: வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை வேகமாக ஓட்டியதால் கால்வாயில் வாகனம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லிப்ட் கேட்டு காரில் ஏறிய அரசு ஆசிரியை உட்பட இருவர் இறந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களான தர் (38), விஜயபாஸ்கர், ராகேஷ் ஆகியோர் காரில் நிறுவன பணிக்காக சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்றனர். பணியை முடித்துவிட்டு நேற்று வாரங்கலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை ஓட்டுநர் உரிமம் இல்லாத தர் ஓட்டிச் சென்றுள்ளார். வழியில் தியாகராஜபள்ளி எனும் இடத்தில், அரசுப்பள்ளி ஆசிரியையான சரஸ்வதி (42) என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட நிலையில் கொங்கவாக்கா எனும் இடத்தில் வந்தபோது, எதிரே வந்த பைக் மீது கார் மோதாமல் இருக்க காரை இடது பக்கமாக தர் திருப்பினார். அப்போது கார் பாலத்தின் மீது மோதி கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதனை பார்த்த சிலர் கால்வாயில் குதித்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஆசிரியை சரஸ்வதி, ஓட்டுநர் தர் உயிரிழந்தனர். ராகேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். விஜயபாஸ்கருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் நீந்தியபடி கரை சேர்ந்தார். இது குறித்து வாரங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x