Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

ராஜஸ்தான், ஹரியாணாவில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற 29 ஒட்டகம் ஜார்க்கண்டில் மீட்பு

புதுடெல்லி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாக்கூர் மாவட்டத்தில் 2 லாரிகளில் இருந்து 29 ஒட்டகங்கள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. இது தொடர்பாக உ.பி. பிரோஸாபாத்தை சேர்ந்த பாபி குமார், கவுசல் ஓஜா ஆகிய 2 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் வனத்துறை நடத்திய விசாரணையில் மேற்கு வங்கத்தில் மால்டா, காலியாசக், தெற்கு தினஜ்பூர் ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதி வழியாக படகுகள் மூலம் வங்கதேசத்துக்கு ஒட்டகங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து பாக்கூர் பகுதி வனத்துறை அதிகாரி அனில்குமார் கூறும்போது, “டெல்லி, உ.பி., பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் வழியாக இந்தக் கடத்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அல்லது ஹரியாணாவில் சுமார் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கப்படும் ஒருஒட்டகத்தின் விலை வங்கதேசத்துக்கு அனுப்பப்படும் போது இரண்டரை லட்சம் வரை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் லாபத்தொகை 5 மாநில கடத்தல் கும்பலுக்கு செல்கிறது. ஒட்டக கடத்தல்வங்கதேசத்தில் குற்றமாகக் கருதப்படுவதில்லை” என்றார்.

ஒட்டகங்கள் கடத்தப்படும் பொறுப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில கும்பல்கள் ஏற்றுக்கொள்கின்றன. இந்தவகையில் ஹரியாணா, ராஜஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ஒட்டகங்கள் நேற்றுமுன்தினம் ஜார்க்கண்டில் சிக்கின.

இடையில் வனத்துறையால் பிடிக்கப்படும் இந்த ஒட்டகங்களுக்கு தீனி போட முடியாமல், அவை ஏலம் விடப்படுகின்றன. இவற்றை ஏலம் எடுக்க பெரும்பாலும் பொதுமக்கள் முன்வருவதில்லை. எனவே, அவை இடைத்தரகர்களால் ஏலம் எடுக்கப்பட்டு மீண்டும் கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கடத்தலால்ஒட்டகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.இது தொடர்பான ஒரு புள்ளிவிவரப்படி கடந்த 2012-ல் சுமார் 4 லட்சமாக இருந்த ஒட்டகங்கள் எண்ணிக்கை 2019-ல் இரண்டரை லட்சமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x