Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறைச் சம்பவம் எதிரொலி போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்

டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின் எதிரொலியாக, இரண்டு முக்கிய விவசாய சங்கங்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் மூன்று புதியவேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசின் அணுகுமுறையில் அதிருப்தி அடைந்த விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணிநடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் இப்பேரணிக்கு போலீஸார் அனுமதி அளித்தனர்.

ஆனால், பிற்பகல் 12 மணிக்கு பேரணி செல்ல போலீஸார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், காலை 8 மணிக்கே விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லிக்குள் நுழைந்தனர். மேலும்,காவல் துறை அனுமதி வழங்கிய சாலைகளில் மட்டுமல்லாமல் மற்றசாலைகள் வழியாகவும் டிராக்டர்களை விவசாயிகள் ஓட்டிச் சென்றனர். பல இடங்களில் போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டும் அவர்கள் முன்னேறினர். பின்னர், செங்கோட்டையை முற்றுகையிட்ட அவர்கள், அங்கு தேசியக் கொடியேற்றும் இடத்தில் ‘கால்சா’ என்ற சீக்கியக் கொடியை ஏற்றினர்.

300 போலீஸார் காயம்

இதையடுத்து, செங்கோட்டையில் இருந்து விவசாயிகளை அகற்றபோலீஸாரும் துணை ராணுவத்தினரும் முயன்றனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர்.

22 வழக்குகள் பதிவு

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக போலீஸார் 22 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் பல விவசாய சங்கத் தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, வன்முறையில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க டெல்லியின் முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து,புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து ராஷ்ட்ரிய கிசான்மஸ்தூர் சங்கத்தின் தலைவர்வி.எம். சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே, அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்தோம். ஆனால், இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிலரின் நோக்கம் வேறு மாதிரியாக உள்ளது. வன்முறையும், அகிம்சை போராட்டமும் என்றும் ஒருசேர பயணிக்க முடியாது. எனவே, இந்தப் போராட்டத்தில் இருந்து எங்கள் சங்கம் விலகிக் கொள்கிறது’’ என்றார்.

பாரதிய கிசான் யூனியன் (பானு பிரிவு) தலைவர் தாக்குர் பானு பிரதாப் கூறும்போது, “டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த வலியை தருவதாக உள்ளது. வன்முறையை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். ஆதலால், டெல்லியின் சில்லா எல்லையில் எங்கள் சங்கம் சார்பில் நடந்து வரும் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்றார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு சர்வதேச அளவில் களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே குடியரசு தினத்தன்று விவசாயிகள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x