Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

மின்னணு ஊடகங்களுக்கு எதிரான வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மின்னணு ஊடகங்களுக்கு எதிரான புகார்களை விரைந்து விசாரிக்க ஏதுவாக சுதந்திரமான, ஒழுங்குமுறை தீர்ப்பாயம் அல்லது நீதித்துறை அமைப்பை ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் நிலேஷ் நவலகா, சிவில் இன்ஜினீயர் நிதின் மமேன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், “மின்னணு ஊடகங்கள், பணம் பெற்றுக்கொண்டு பொய் செய்தி வெளியிடுவதுடன், வெறுப்புணர்வூட்டும் தகவல்களை பரப்புகின்றன. வகுப்புவாத பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

எனவே, மின்னணு ஊடக தொழில் விதிமுறைகள் தொடர்பான முழு சட்டக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்வதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை பரிந்துரைப்பதற்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி தலைமையில் உயரதிகாரக் குழுவை ஏற்படுத்த வேண்டும். ஊடகத் துறையின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த வேண்டும் என நாங்கள் கோரவில்லை. தவறான தகவல், வன்முறையை தூண்டும் செய்திகள், பொய்ச் செய்திகள், அந்தரங்க உரிமைக்கு எதிரான செய்திகள் ஆகியவற்றுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றே கோருகிறோம்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் தொடர்புடைய மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x