Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் காஷ்மீரில் குப்கார் கூட்டணி வெற்றி ஜம்முவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் காஷ்மீரில் குப்கார் கூட்டணியும் ஜம்முவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக.வும் வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு நீக்கியது. இதற்கு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ‘சிறப்பு அந்தஸ்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் ‘குப்கார் கூட்டணி’யை அமைத்தன. தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையிலான இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் உட்பட 7 கட்சிகள் இடம்பெற்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களில் 280 இடங்களுக்கான மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் காஷ்மீர் பகுதியில் குப்கார் கூட்டமைப்பு 110 இடங்களில் வென்றுள்ளது. ஜம்முவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக 74 இடங்களில் வென்றுள்ளது. இதர இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 20 மாவட்டங்களில் பரூக் அப்துல்லா கூட்டணி 9 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளது. ஆனால், நகர் மாவட்டத்தில் சுயேச்சைகள் 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், யார் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் என்பது தெரியவில்லை. ஜம்மு, உதாம்பூர், சம்பா, கதுவா, ரியாசி, தோடா ஆகிய 6 மாவட்டங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘‘இந்த தேர்தலில் பாஜக.வுக்கு 4.5 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் தேசிய மாநாடுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளை விட அதிகம். பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளின் கன்னத்தில் மக்கள் கொடுத்த அறை’’ என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் மாவட்ட வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளும். கவுன்சில் தலைவர் அமைச்சருக்கான அந்தஸ்துடன் செயல்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x