Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

சர்க்கரை ஏற்றுமதிக்குரூ.3,600 கோடி மானியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3,600 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

அதேபோல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கும் இந்தக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை உற்பத்தி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தேவைக்கும் அதிகமாக சர்க்கரை இருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதன் விலை இறக்கத்தை சந்தித்துள்ளது.

இதனால், கரும்பு விவசாயிகள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காக, 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ரூ.3,600 கோடி மானியம் வழங்கமத்திய உணவுத்துறை பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மானியத் தொகையானது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான ஏலம்கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தகட்டமாக 2251.25 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை வரும் மார்ச் மாதம் ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 332.70 கோடி ஆகும்.2016-ம் ஆண்டு ஏல நிபந்தனைகளே எதிர்வரும் ஏலத்துக்கும் பொருந்தும். இதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x