Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

விநியோகம் குறித்து டபிள்யூஎச்ஓ கரோனா மருந்து தயாரிப்புநிறுவனங்களுடன் ஆலோசனை

உலகம் முழுவதும் பரவி பெரும் அழிவை எற்படுத்திய கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கப்படவில்லை. பல தடுப்பு மருந்து நிறுவனங்கள், தடுப்பு மருந்தை தயாரித்து அவற்றின் பரிசோதனைக்குப் பிறகு சந்தையில் விநியோகிப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. சீரம் நிறுவனம், பைசர் நிறுவனம் போன்றவை தடுப்பு மருந்துகளைத் தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்தத் தடுப்பு மருந்துகளை விரைவில் விநியோ கிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யூஎச்ஓ) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரிவு, ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதில் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், நாடுகளின் சுகாதார ஒழுங்குமுறை ஆணையங்கள் கலந்து கொண்டன.

ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற சந்திப்பு நடந்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாகச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கானொலி மூலமாக இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவன தென்கிழக்கு ஆசிய இயக்குநர் டாக்டர் பூனம் கெத்ரபால் சிங், கரோனா தடுப்பு மருந்து விநியோகம் விரைவாக நடக்க தடுப்பு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானது என்றார்.

அந்தந்த நாடுகளின் தொற்றுப் பரவல் சூழல், தடுப்பு மருந்து தேவை, விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் தேசிய ஒழுங்கு முறை அமைப்புகள் தடுப்பு மருந்து விநியோகத்தைத் திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடலுக்கு ஏற்ப தடுப்பு மருந்து நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்து பதிவு செய்தல், அதற்கான ஒப்புதல், உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து பாரத் பயோடெக், பயோலாஜிக்கல் இ லிமிடெட், கெடிலா ஹெல்த்கேர், சீரம் இன்ஸ்டிடியூட், டாக்டர் ரெட்டீஸ், வொக்ஹார்ட் லிமிடெட் ஆகியவை கலந்து கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x