Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

மேற்கு வங்கத்துக்கு சென்ற பாஜக தேசிய தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகே உள்ள டைமன்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காலை சென்றார். இந்நிலையில் வழியில் நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த பாஜக தொண்டர்கள் சிலர் தடிகளால் தாக்கப்பட்டனர். ஊடக வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறும்போது, “துர்கா தேவியின் கருணையால்தான் இந்த பொதுக்கூட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளேன். எனது வாகனம் உட்பட அனைத்து வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு துளைக்காத காரில் பயணம் செய்ததால் நான் உயிர் தப்பினேன். இந்த தாக்குதலில் பாஜக மூத்த தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இது ஜனநாயத்துக்கு நேர்ந்த அவமானம் ஆகும். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கின்மையும் சகிப்பின்மையும் முடிவுக்கு வரவேண்டும்” என்றார்.

பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசும்போது, “மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது. அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளது. இங்கு குண்டர்களின் ராஜ்ஜியம் தொடர அனுமதிக்கக் கூடாது” என்றார்.

அமித் ஷா உத்தரவு

இதனிடையே இந்த தாக்குதல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x