Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

நாகாலாந்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் ராணுவம் நடத்திய - துப்பாக்கிச் சூட்டில் 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு : உயர்நிலை விசாரணைக்கு உத்தரவுவன்முறை பரவுவதால் மாநிலம் முழுவதும் பதற்றம்

நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ராணுவத்தை கண்டித்து நிகழ்ந்த வன்முறையில், மோன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.படம்: பிடிஐ

கோஹிமா

நாகாலாந்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 சுரங்க தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் வன்முறை பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்கள் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. சீனாவின் ஆதரவுடன் பல்வேறு தீவிரவாத குழுக்கள் மியான்மர் எல்லைப் பகுதிகளில் செயல்படுகின்றன. அந்த குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த நவம்பர் 13-ம் தேதி மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையின் கர்னல் விப்லப் திரிபாதி, அவரது மனைவி, 5 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மியான்மரில் இருந்து செயல்படும் பிஎல்ஏஎம் என்ற தீவிரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மியான்மர் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நாகாலாந்தின் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா, கடந்த 1-ம் தேதி கோஹிமா மாவட்டம் கிசாமில் தொடங்கியது. இந்த திருவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்காரணமாக நாகாலாந்தின் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் மியான்மர் எல்லையை ஒட்டிய நாகாலாந்தின் மோன் மாவட்ட பகுதியில் என்எஸ்சிஎன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் வாகனத்தில் செல்வதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திரு - ஒடிங் சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.

அப்போது உளவாளிகள் கூறியஅடையாளங்களுடன் கூடிய வாகனம் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த வாகனத்தை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றது. சந்தேகமடைந்த ராணுவ வீரர்கள், வாகனத்தில் தீவிரவாதிகள் தப்பிச்செல்வதாக நினைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் வாகனத்தில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்தவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள் என்பதும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் என்பதும் தெரியவந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, 9 பேர் இறந்தனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ராணுவ வீரர் உயிரிழப்பு

வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ராணுவ நடவடிக்கையில் அவர்கள் உயிரிழந்தது தெரியவந்ததும் பொதுமக்கள் ஒன்று திரண்டு ராணுவ வீரர்கள், போலீஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பொதுமக்களின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். பல வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாகாலாந்து முழுவதும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்ன்பில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நாகாலாந்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையான விசாரணை நடத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து முதல்வர் நெய்பியுரியோ கூறும்போது, ‘‘ஒடிங் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளைவேண்டுகிறேன். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முழுமையான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். அனைத்து சமூக மக்களும் அமைதி காக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணுவம் விளக்கம்

ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதிகளின் நடமாட்டம் தொடர்பாக உளவாளிகள் அளித்ததகவலின்பேரில் நாகாலாந்தின் மோன் மாவட்டம் திரு பகுதியில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராணுவ தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து சம்பவம் குறித்துமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதிநாராவனே ஆகியோரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நாகாலாந்தின் கோன்யாக் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமின் மீதும் பொதுமக்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் பல வீரர்கள் காயமடைந்தனர். இதேபோல பல்வேறு ராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை பரவுவதை தடுக்க பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பதற்றம் அதிகரித்து வருவதால் டெல்லியில் முகாமிட்டிருந்த முதல்வர் நெய்பியு ரியோ, கோஹிமாவுக்கு திரும்பியுள்ளார். வன்முறை சம்பவங்களை தடுக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ராணுவ நடவடிக்கை குறித்து கோன்யாக் நாகா பழங்குடியின மூத்த தலைவர் யாம் வாங்ஸா கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் இந்திய ராணுவம் மிகப்பெரிய அமைப்பாகும். தீவிரவாதிகள் யார்,அப்பாவி மக்கள் யார் என்பதுகூடராணுவத்துக்கு தெரியாதா, பாதுகாப்புப் படையினர் என்ற பெயரில் எங்கள் மண்ணை வெளிமாநில மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதன்காரணமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சொந்த மண்ணில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மத்திய உள்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x