பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு 10% போனஸ் : கருணைத் தொகையுடன் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு 10% போனஸ் :  கருணைத் தொகையுடன் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

தீபாவளியை முன்னிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் இந்தாண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2020-21-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா 2-ம் அலையின் காரணமாக பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழுமாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-21ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள, நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என 10 சதவிதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால், போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் ரூ.8.400 பெறுவர். மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 2 லட்சத்து 87,250 தொழிலாளர்களுக்கு ரூ.216 கோடியே 38 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in