Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்.. போர் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு - காபூல் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு : அமெரிக்க விமானங்களைப் பிடித்து தப்பிச் செல்ல மக்கள் முயற்சி வன்முறையால் பதற்றம் நீடிப்பு

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க விமானப் படை விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில் எப்படியாவது ஏற வேண்டும் என்று பொதுமக்கள் முயற்சி செய்கின்றனர். ஓடுபாதையில் விமானம் புறப்பட்டபோது விமானத்தின் இருபுறமும் ஏராளமானோர் பின்தொடர்ந்து ஓடினர்.

காபூல்

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந் துள்ளது. போர் முடிவுக்கு வந்திருப்ப தாக தலிபான்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். எனினும் தலை நகர் காபூலில் பதற்றம் நீடிக்கிறது. அங்குள்ள விமான நிலையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த தலிபான்கள் ஆட்சியை கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்க ராணு வம் அகற்றியது. சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர் களும் நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் வீரர்களும் அந்த நாட்டில் முகாமிட்டனர். புதிய அரசு ஏற்படுத்தப்பட்டு ராணுவம், போலீஸ் படைகள் உருவாக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் சுமார் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் சிறப்புப் பயிற்சிகளை வழங்கியது. அரசுப் படைகளை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக் காலத் தில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமை யாக வாபஸ் பெற முடிவு செய்யப் பட்டது. கடந்த ஜனவரியில் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைட னும் படைகள் வாபஸ் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். கடந்த மார்ச், ஏப்ரல் நிலவரப்படி ஆப் கானிஸ்தானில் 2,500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே முகாமிட் டிருந்தனர்.

அமெரிக்க படைகள் வெளி யேறியதால் தலிபான்களின் கை ஓங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் 50 முதல் 70 சதவீத பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் போர் தீவிர மானது. சில நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி தலைநகர் காபூலை தவிர இதர பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் வசமானது.

இதனிடையே, கத்தார் நாட்டில் அமெரிக்கா, தலிபான்கள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் காபூல் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பிறகே காபூலில் நுழைவோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி உட்பட முக்கிய தலைவர்கள் நேற்று முன்தினம் காபூலை விட்டு வெளியேறினர். அவர்கள் ஓமனில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைநகர் காபூலில் நேற்று அதிகாலை எவ்வித எதிர்ப்பும் இன்றி தலிபான் படைகள் நுழைந்தன. அதிபர் மாளிகை உட்பட தலை நகர் முழுவதும் அவர்கள் கட்டுப்பாட் டின் கீழ் வந்துள்ளன.

தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம், தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானிஸ்தானில் போர் முடி வுக்கு வந்துவிட்டது. 20 ஆண்டு களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றிருக்கிறது. எங் கள் மண்ணை வெளிநாட்டினர் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் வெளியிட்ட வீடியோவில், ‘‘நாங்கள் முன்னேறிய வேகத்தை யாரும் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள். ஆப்கானிஸ் தான் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். இழப்புகளை சரி செய்வதற்கான நேரம் வந்து விட்டது. எங்களுடைய சேவையை தேசத்துக்கு வழங்கு வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

யாரையும் காயப்படுத்த மாட் டோம். அமைதி திரும்பும் என்று தலிபான் தலைவர்கள் வாக் குறுதி அளித்தாலும் காபூல் முழு வதும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந் திருப்பதாகவும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவ தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாகனங்கள், பொருட்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த விமான நிலையத்துக்குள் ஆயிரக் கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் குழுமி உள்ளனர்.

பயணிகள் விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில் அமெரிக்க விமானப் படை விமானங்களில் தப்பிச் செல்ல மக் கள் முயற்சி செய்து வருகின்றனர். அமெரிக்க விமானங்கள் புறப்படும்போது அதன் இறக்கை, சக்கர பகுதிகளில் தொற்றி ஏற முயன்றனர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரு கின்றன. காபூல் விமான நிலையத் தில் கூட்டம் கட்டுங்கடங்காமல் சென்றதால் அமெரிக்க படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்து விழுந்தனர்

மேலும், அமெரிக்க விமானம் ஒன்று மேலெழும்பி பறந்தபோது இறக்கை, சக்கர பகுதிகளில் சிலர் தொங்கிச் சென்றனர். விமானம் உயரத்தில் பறந்தபோது 3 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்து உயிரிழந் தனர். காபூலின் அவலத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆப்கானிஸ்தானுக்கான பிரதிநிதி குலாம் கூறும்போது, “காபூலில் வீடு வீடாக தலிபான்கள் சோதனை நடத்துகின்றனர். ஏராளமானோர் படுகொலை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உடைமைகள் சூறையாடப்பட்டு வருகிறது. இந்த வன்முறையை தலிபான்கள் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய அதிபர் யார்?

தலிபான் அமைப்பின் தலைவராக மவுலவி ஹிப்துல்லா அகுந் ஸாதா பதவி வகிக்கிறார். அரசியல் துணைத் தலைவர்களாக முல்லா அப்துல் கனி பராதர், முல்லா முகமது யாகூப், சிராஜுதின் ஹக்கானி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்ககூடும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான், சவுதி அரேபியா வின் மூத்த தலைவர்கள், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் சுமுக உறவை ஏற்படுத்த தலிபான்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் செயல்பாடுகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு ஏற்ப மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியர்கள் பத்திரமாக திரும்புவர்

ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட இந்திய தூதரகரங்களில் பணியாற்றிய சுமார் 200 ஊழியர்கள் நேற்று முன்தினம் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப் படையின் சரக்கு விமானம் காபூலில் இருந்து 46 இந்தியர்களுடன் நேற்று பிற்பகல் டெல்லி வந்தது. காபூலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்திய வெளியுறவுத் துறை நேற்று கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து அறிவுரை கூறிவந்தோம். உதவி எண்களையும் வெளியிட்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இன்னும் சில இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள். அவர்களோடு தொடர்பில் உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x