Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

தமிழக நிதி நிலைமையை சரிசெய்ய வரி விதிப்பில் மாற்றம் தேவை - 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு : வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதியமைச்சர் தகவல்

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி யமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன், கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாகத் திறமையின்மையால் ரூ.1 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிதிநிலைமையை சரி செய்ய வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமி ழகத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக் கப்பட்டது. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று காலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகள், கடந்த 2001-ல் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய நிதியமைச்சர் சி.பொன்னையன் வெளி யிட்ட வெள்ளை அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுக்கு வருவாய் வராவிட்டாலும் கூட செலவினங்களை குறைக்க முடியாது. தமிழகத்தின் வருவாய் சரிந்துள்ளது. 14-வது நிதிக்குழுவின் அறிக்கைப்படி எதிர்பார்த்ததைவிட ரூ.75 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது உற்பத்தி மதிப்பில் 3.16 சதவீதமாக உள்ளது. கடந்த 2006-11 காலகட்டத்தில் வருவாய் உபரியாக இருந்தது. ஆனால், 2011-16-ல் ரூ.17 ஆயிரம் கோடி பற்றாக்குறையானது. இது 2016-21-ல் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஊதியம், ஓய்வூதியம், பராமரிப்பு செலவுகள், கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கு கூட கடன் பெற்று செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,64,926 கடன் உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் கடன் வாங்கி, அதை திருப்பித் தரும் நம்பிக் கையை இழந்தால், அரசு கடன் உத்தர வாதம் வழங்க வேண்டும். அந்த வகையில், ரூ.91,818 கோடிக்கு கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்த உற்பத்தியில் 1.39 சதவீதமாக இருந்த வரியில்லா வருவாய், தற்போது 0.7 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. மத்திய அரசின் வரிப் பங்கும் 2.20 சதவீதத் தில் இருந்து 1.28 சதவீதமாக குறைந்து விட்டது. செஸ் வரியையும் மத்திய அரசு பகிர்ந்தளிப்பதில்லை. தமிழகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு தரவேண்டியது.

இலவச திட்டங்கள், உணவு மானியம் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது. 2.01 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங் கப்பட்டது. வருமான வரி கட்டியவர் களுக்கும், அரசு ஊழியர்களுக்கும்கூட இந்த தொகை சேர்ந்துள்ளது. வருமான வரி தரவுகள் மாநில அரசிடம் இல்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை திருத்தியே ஆக வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த பல ஆண்டுகளாக சொத்து வரி அதிகரிக்கப் படவில்லை. தற்போது சொத்து வரியை அதிகரித்தால் மட்டுமே 15-வது நிதிக்குழு வின் உதவி மானியங்களை பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதை திருத்தியமைக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள்

தமிழகத்தில் உள்ள 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத் தில் இயங்குகின்றன. குறிப்பாக போக்கு வரத்து, மின்துறை நிறுவனங்கள் மட்டும் ரூ.2 லட்சம் கோடி கடனில் இயங்குகின் றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் குடிநீர் உற்பத்தி தொகையைவிட, பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள் கடனில் உள்ளன. எனவே, அடிப்படையான மறுகட்டமைப்பு தேவைப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் இல்லாமலும், இயலாமை, முறைகேடு, நிர்வாகத் திறமையின்மை போன்ற காரணங்களாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் இவற்றை திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவற்றை சீரமைப்பதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் வெளியிட உள்ளோம்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரி விதிப்பில் மாற்றம்

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறியது:

திட்டத்துக்கான நிதி யாரிடமுமோ சென்று சேர்கிறது. அவ்வாறு செல்லும் நிதியை நிறுத்தினால், வளர்ச்சியும் அதி கரிக்கும். சமூக நீதிக்கும் நல்லது. எனவே, கசப்பு மருந்து கொடுக்கத் தேவையில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. வரி ஏய்ப்பை தடுத்தாலே வருவாயை அதிகரிக்க முடியும்.

வரி இல்லாவிட்டால் அரசுக்கு வருவாய் வராது என 15-வது நிதிக்குழுவே தெரி வித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக சில வரிகள் மாற்றியமைக் கப்படவில்லை. இதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

வரியை அதிகரிப்பதென்றால் சாமா னியர்களுக்கு குறைந்த அளவும், ஏழை களுக்கு பாதிப்பில்லாமலும் பணக்காரர் களுக்கு கூடுதலாகவும் விதிக்க வேண்டும். தண்ணீர் வரியை பொறுத்தவரை குடிசைக் கும், பங்களாவுக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. பயன்பாட்டை பொறுத்து கட் டணம் நிர்ணயிக்க வேண்டும். சொத்து வரி விதிப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். எனவே, வரி விதிப்புக்கான திருத்த திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளோம். அடுத்த பட் ஜெட்டில் அதை செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x