Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது டோஸ் போடும் காலம் அதிகரி்ப்பு - மருந்து, ஆக்சிஜன் கையிருப்பு குறித்து பிரதமர் ஆலோசனை : மே 18, 20-ல் ஆட்சியர்களுடன் கலந்துரையாடுகிறார்

மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் விநியோகம் ஆகியவை குறித்து உயர்நிலைக் குழுவினருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாட்டில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் கையிருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆலோசிப்பதற் காக, பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் புதன் கிழமை நடந்தது. மருந்து உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மாநிலங் களுக்கு தேவையான அளவு மருந்து கள் வழங்கப்படுவதாகவும் பிரதம ரிடம் அதிகாரிகள் கூறினர். விமானப் படை விமானங்களில் ஆக்சிஜன் கொண்டுவரப்படுவது குறித்தும், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவுதல் குறித்தும் விளக்கினர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை துடிப்பானதாக உள்ளது. அதனுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை அரசு தொடர்வது அனைத்து மருந்துகளும் முறையாக கிடைப்பதை உறுதி செய்யும்’’ என்றார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ் டிரா, கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதன்படி, வரும் 18-ம் தேதி 46 மாவட் டங்களின் ஆட்சியர்களுடனும், 20-ம் தேதி 54 மாவட்டங்களின் ஆட்சியர்களு டனும் காணொலி காட்சி வாயிலாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன, தொற்று வேகமாக பரவு வதற்கு காரணங்கள் என்ன, அவற் றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக் கப்படும் என தெரிகிறது.

தடுப்பூசிக்கான இடைவெளி அதிகரிப்பு

கரோனாவை கட்டுப்படுத்த கோவி ஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரு கின்றன. இப்போது, கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்ட பிறகு 4 முதல் 6 வாரங்களுக்குள் 2-வது டோஸ் போடப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி முதலில் 4 முதல் 6 வாரங்களாக இருந்தது. பின்னர், 6 முதல் 8 வாரங்களாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப் பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங் களாக அதிகரிக்க தேசிய நோய்த் தடுப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இரண்டாவது டோஸ் 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்தப்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியில் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் குணமடைந்த பிறகு 6 மாதங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது. முதல் டோஸ் தடுப் பூசி போட்டுக்கொண்டு இரண்டாவது டோஸ் செலுத்தும் முன்பு கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், குணமடைந்த பின் 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும். பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகள் கரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x