Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பாரதிய கிசான் யூனியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கா விட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத் தும் நோக்கில் 3 புதிய வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத் துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.

ஆனால், புதிய வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏபிஎம்சி எனப்படும் விவசாய விளைபொருட்கள் விற்பனை சந்தைகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்த சட்டங்கள் வகை செய்கின்றன.

வேளாண் உற்பத்தி பொருட்களை, குறிப்பாக கோதுமை, நெல் கொள்முதலை அரசு படிப்படியாக குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

எனவே, இந்தச் சட்டங்கள் தனியா ருக்கு பயன் தருவதாகத்தான் இருக் குமே தவிர, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நடைமுறை கைவிடப்படுவதால் தாங்கள் சிரமத்துக்கு ஆளாவோம் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேநேரத்தில், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும். புதிய விவசாய சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட் களுக்கு நல்ல விலையை பெற முடியும். கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். நுகர்வோரும் வர்த்தகர் களும் பயனடைவர். விவசாயிகள், வர்த்தகர்கள், நுகர்வோர் என 3 தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய சட்டங்களாக இவை செயல்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்தது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது.

இதை விவசாயிகள் ஏற்கவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள், டெல்லி எல்லையில் முகாமிட்டு கடந்த 15 நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 8-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதி களுடன் மத்திய அரசு சார்பில் பலமுறை பேச்சு நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் பானு பிரதாப் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் நலன்களை முற்றிலும் புறக்கணித்து, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங் களில் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இல்லை. இந்த சட்டங் களை எதிர்த்து நாட்டில் உள்ள லட்சக் கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் போதிய விவா தங்கள் இல்லாமலேயே இந்த சட்டங் களை மத்திய அரசு தன்னிச்சையாக இயற்றியுள்ளது.

விவசாயிகளின் நலனுக்கு முற் றிலும் எதிரான இந்த சட்டங்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த சட்டங்களை எதிர்த்து தற் போது விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் விரைவில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்து வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வேளாண் சட்டங் களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

700 மாவட்ட விவசாயிகளை சந்திக்கிறது பாஜக

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதன்படி, 100 செய்தியாளர் சந்திப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், விவசாயிகளை சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது விவசாயிகளின் சந்தேகங்கள் களையப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போராடும் விவசாய சங்கங்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சட்டம் தொடர்பான சந்தேகங்களை விளக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x