Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் வசிக்கும் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க புதிய அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற் றுள்ள ஜோ பைடன், ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 46-வது அதி பராக பதவியேற்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்கிறார். இதைத் தொடர்ந்து குடியுரிமை விவகாரத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்கா முழுவதும் சட்ட விரோதமாக சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் தங்கியுள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந் தியர்கள். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆண் டுக்கு 95 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பைடன் தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘குடியுரிமை விவகாரங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். அமெரிக்க எல்லையில் நுழைந்து கைது செய்யப்படும் குடும் பத்தினர் தனித்தனியாக பிரிக்கப்பட மாட்டார்கள். 1.1 கோடி சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

‘அமெரிக்காவுக்கு வேலை தேடி வருவோருக்கு வழங்கப்படும் விசாக் களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினர் அமெரிக் காவில் தங்க வசதியாக விசா நடை முறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்’ என்பன உள் ளிட்ட வாக்குறுதிகளையும் பைடன் அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அப்படியே நிறைவேற்றப்படும் என்று பைடன் தரப்பு உறுதி அளித்திருக்கிறது.

‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக எல்லையை தாண்ட யார் முயற்சி செய்தாலும் அவர்களின் காலில் சுடுங்கள்’ என்று தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தர விட்டிருந்தார். அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தாய் ஒரு முகாமிலும் குழந்தை ஒரு முகாமிலும் அடைக்கப் பட்டனர். அதிபர் ட்ரம்பின் இந்த மனிதாபிமானமற்ற செயல்களை ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஜோ பைடன் உரை

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதும் டெலவரின் வில்மிங்டனில் மக்களிடையே அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

அமெரிக்க மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஜனநாயக கட்சியின் வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. அமெரிக்க அதிபராக பதவி யேற்கும்போது நாட்டை ஒன்றிணைப் பேன். குடியரசு கட்சி மாகாணம், ஜனநாயக கட்சி மாகாணம் என்று பிரித்துப் பார்க்க மாட்டேன். அனைத்து மாகாணங்களிலும் அமெரிக்காவை மட்டுமே பார்ப்பேன்.

அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினரை எதிரிகளாக பாவிக் கக் கூடாது. அவர்கள் நமது எதிரிகள் கிடையாது. அவர்கள் அமெரிக்கர்கள்.

நமது முதல் பணி கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும். வைரஸ் பரவலை தடுப்பது தொடர் பாக விரைவில் நிபுணர்கள் குழு அறிவிக்கப்படும்.

இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

மோடி, சோனியா வாழ்த்து

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைட னுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலை வர்கள் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்க அதிபராக பைடன் தேர்வு செய்யப் பட்டுள்ள விஷயம் பிர மிக்கத்தக்கதாகும். துணை அதிபராக தேர்வு செய்யப்பட் டுள்ள கமலா ஹாரிஸ், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி. கமலா ஹாரிஸின் வெற்றி மகத்தானது. உங்கள் வெற்றி உங்கள் சித்திக்கு மட்டுமல்லாமல் அனைத்து இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமை அளிக்கக் கூடியது’ என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப் பட்டபோது இந்தியாவில் உள்ள தனது சித்தியின் பெயரை நினைவுகூர்ந்தார். அதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடனுக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள தங் களுக்கு இந்திய மக்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகள். அமெ ரிக்க மக்களை இனப் பாகுபாடின்றி ஒன்றுபடுத்த இருப்பதாக நீங்கள் அளித் திருக்கும் வாக்குறுதி புதிய நம்பிக் கையை தந்திருக்கிறது. உங்களின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ், இந்திய பிராந்தியத்தில் மட்டு மின்றி உலகம் முழுவதும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

கமலா ஹாரீஸுக்கு கடிதம்

இதேபோல, கமலா ஹாரீஸுக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில், ‘தங்களின் வெற்றியானது அமெரிக்கா வில் வசிக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்க மக்கள் மற்றும் இந்திய மக்களின் வெற்றியாக கருதப்படுகிறது. தங்கள் சீரிய தலைமையின் கீழ் இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுப்பெறும்‘ என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். அவர், அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்தி சரியான பாதையில் வழிநடத்துவார் என தீர்க்கமாக நம்புகிறேன். துணை அதிபராக பதவியேற்கவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்’ என கூறியுள்ளார்.

கமலாவின் பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்

திருவாரூர்: அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். நேற்று கிராம மக்கள் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். கமலா ஹாரிஸின் முன்னோர்கள் வழிபட்ட தர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடும் நடத்தினர்.

அமைச்சர் ஆர்.காமராஜ், அதிமுக நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கமலாவின் உறவினர்கள், கிராம மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலா ஹாரிஸின் உறவினரான ரமணி கூறும்போது, ‘‘கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரத்துக்கு வரவேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x