Last Updated : 28 May, 2021 06:40 AM

 

Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

எஸ்என்என்: மானுட விடுதலைச் சிந்தனையாளர் :

இந்தியாவின் பத்து முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ பத்திரிகையால் குறிப்பிடப்பட்ட எஸ்.என்.நாகராஜன் இடையறாது சிந்தித்தார்; தீவிரமாகச் சிந்தித்தார்; சமூக மாற்றத்துக்கான முயற்சிகளை ஒரு கணமும் தள்ளிப்போட முடியாது என்ற அவசரத்துடன், வேகத்துடன் சிந்தித்தார். அந்தச் சிந்தனை எந்தத் தருணத்திலும் அவரை மடை திறந்தாற்போல சொற்பெருக்காற்ற வைத்தது. அவரிடம் கருத்தியல் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் கேள்வி எழுப்ப முயன்றவர்கள் அந்தக் காட்டாற்றில் மூச்சுத் திணறினார்கள். அதன் வேகத்தில் தாவித்தாவிச் சென்று பல புள்ளிகளை இணைக்கும், சம்வாதத் தொனியில் பல தீர்மானகரமான உச்சரிப்புகளைச் செய்யும் அவரது பேச்சுமுறை பலரையும் அதிர்ச்சிக்கும் அயர்வுக்கும் உள்ளாக்குவது. அதே சமயம், ஈர்க்கவும் கூடியது.

எஸ்என்என் என்ற பெயரை அவரது கட்டற்ற சிந்தனைப் பிரவாகத்திலிருந்து பிரிக்க முடியாது. அந்த வேகத்தை தேக்கிக் கருத்துகளை எழுத்தில் செதுக்கவோ, கோட்பாட்டாக்கம் செய்யவோ அவருக்கே இயலவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலே ஒருசில கட்டுரை ஆக்கங்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் சிந்தனைகள் நூலாக வடிவெடுக்கக் காரணம். அவர் எழுத்துமே உரையாடல் தொனியில், சம்வாதத் தொனியில் அமைந்ததுதான். அவற்றில் கோட்பாட்டு முழுமையை எதிர்நோக்க முடியாது. தூண்டல்களும் தெறிப்புகளும் சவால்களும் மிகுந்திருக்கும்.

எஸ்என்என் சிந்தனை முறையைப் புரிந்துகொள்ள சிந்தனையைக் குதிரையாக உருவகம் செய்வோம். ஒருசிலர் நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரைகளைப் பழக்கிப் பந்தயங்களில் ஈடுபடுத்திப் பரிசுகளை வெல்வார்கள். ஒருசிலர் குதிரையில் ஏறிப் போர்க்களம் புகுவார்கள். சிலர் குதிரையில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வார்கள். சிலர் அதை வண்டிகளில் பூட்டிப் பொருட்களையோ மனிதர்களையோ ஏற்றி இழுக்கச் செய்வார்கள். இவர்களிலிருந்தெல்லாம் மாறுபட்டுப் பழக்கப்படாத ஒரு முரட்டுக் குதிரையில் ஏறுபவர் அதன் மேலிருந்து கீழே விழாமல் இருப்பதற்கே முதலில் முயற்சிக்க வேண்டும். அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதெல்லாம் பிறகுதான் செய்ய முடியும். ஒருசில சிந்தனையாளர்கள் இப்படி முரட்டுக் குதிரை சவாரி செய்பவர்கள். அவர்கள் தீவிரமான அடிப்படைக் கேள்விகளை எடுத்துக்கொண்டு அவை கூட்டிச்செல்லும் திசையெல்லாம் காடுமேடுகளில் எல்லாம் பயணிப்பார்கள்.

நாம் பெரியாரை இப்படி ஓர் உதாரணமாகக் கொள்ள முடியும். சாதி அடையாளத்தை இழிவானதாகக் கற்பிப்பது எப்படி சாத்தியமாகிறது, அதை எப்படி முறியடிப்பது என்ற கேள்வியின் மீதேறி வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் அவர். பெரியாரின் பயணம் எந்தக் கருத்தியலுக்குள்ளும் அடைபடாமல், எந்த அதிகார பீடத்தாலும் தடுக்கப்படாமல் முடிவற்ற பாய்ச்சலாக ஓயாத கேள்விகளாக உக்கிரமாக வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. அந்தக் கேள்விகள் அனைத்து நிறுவனச் சொல்லாடல்களுடனும் கருத்தியல்களுடனும் முரணுற்று நிற்பதால் இத்தகைய சிந்தனை முறையை எதிராடல் சிந்தனை (agonistic thinking) என்று அழைக்கிறார்கள்.

அதிகாரத்தையும் ஆற்றல்களையும் ஒருசில புள்ளிகளில் குவிக்காமல் மக்களிடமே பகிர்ந்தளிக்கும் சமூக அமைப்புக்கான வழி எது என்ற கேள்வியின் மீதே எஸ்என்என் பயணித்தார் என்று எனக்கு படுகிறது. அது முதலீட்டிய உற்பத்தி முறை, நவீன இயந்திரமயமான அறிவியல் தொழில்நுட்பம், ‘மேற்கத்திய’ இயங்கியல், அறிதல் முறை எனப் பல்வேறு அம்சங்களைக் கேள்வி கேட்கவும், அதற்கான மாற்றுகளைப் பல்வேறு பண்பாட்டு மூலகங்களில் தேடவும் அவரைச் செலுத்தியது. அதற்கு இசைந்த இயற்கை வேளாண்மை போன்ற களங்களில் செயல்பட வைத்தது. அவரது சிந்தனை இழைகளில் குறிப்படத்தக்க ஒன்று ‘மேற்கத்திய’ இயங்கியல் என்று அவர் அழைத்த ஹெகலிய இயங்கியல் மீதான விமர்சனம். அது கார்ல் மார்க்ஸ் செய்த விமர்சனங்களிலிருந்து வேறுபட்டது.

ஹெகலிய இயங்கியலின் அடிப்படை அம்சம் புலன் உணர்வுக்கும் (sense certainty), புரிந்துணர்வுக்கும் (self certainty) உள்ள உறவுதான். வேண்டும் என்றே துணிந்து மிக எளிமையாகச் சொன்னால் புலன் உணர்வு தரும் ஒரு தகவல், புலன் உணர்வு தரும் இன்னொரு தகவலை மறுக்கிறது. ஆனால், புரிந்துணர்வு இரண்டையும் இணைத்துத் தனக்கான இயங்குதளத்தைக் காண்கிறது. இதுவே சுயத்தின் உறுதிப்பாடு. இந்தச் சுய உறுதிப்பாட்டில் புலன் உணர்வுகள் கடக்கப்பட்டுவிடுகின்றன. விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் வளிமண்டலத்தின் ஈர்ப்பு விசையைக் கடந்தவுடன் எரிபொருள் கலன் கழன்று விழுவதைப் போல புலன் உணர்வு தன் முக்கியத்துவத்தை இழக்கிறது.

இந்தக் கடத்தலை ஜெர்மன் மொழியில் ’அவ்ஃபபென்’ (aufheben) என்றும், ஆங்கிலத்தில் ’சப்லேஷன்’ (sublation) என்றும் கூறுவார்கள். பரவலாக இதை ‘தீஸிஸ்’ (thesis) என்பதும், ‘ஆன்டி-தீஸிஸ்’ (anti-thesis) என்பதும் ‘சிந்தெஸிஸி’ல் (synthesis) கடக்கப்படுவதாகக் கூறுவார்கள்.

இந்தச் செயல்பாடு விரிவுகொள்ளும்போது புரிந்துணர்வு பொதுமையாக்கப்படுவதில் வன்முறை தொடங்குகிறது. வித்தியாசங்கள் வேறுபாடுகளாக உள்வாங்கப்பட்டு முரண்பாடாகச் சிந்திக்கப்பட்டு அந்த முரண்பாட்டைக் கடக்கப் பொதுக்கருத்து உருவாகும்போது வித்தியாசங்களின் இயல்பான சக இருப்பு மறுதலிக்கப்படுகிறது.

ஹெகலிய இயங்கியலின் இந்த முரண்களைக் கடந்த உறுதிப்பாட்டின் தேவை சமூக, அரசியல் இயக்கங்களிலும் தலைமையின் அதிகாரத்தை நிறுவின. அதிகார மையத்தின் சிந்தனையின் சுய உறுதிப்பாட்டிலிருந்து விலகுபவர்கள் எதிரிகளாகக் கணிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதும் அழிக்கப்படுவதும் நிகழ்ந்தது. அறிவியலில் அவதானிப்பிலிருந்து ஊகம், ஊகத்தை சரிபார்க்க பரிசோதனை என்பது மாறி, பரிசோதனையிலிருந்து உறுதிப்பாடு, அதிலிருந்து செயல்பாடு என்று இயற்கையின் மீதான ஆக்கிரமிப்பு துவங்கியது.

இத்தகைய முரண்பாட்டு உருவாக்கம், முரண்பாட்டைக் கடந்த உறுதிப்பாடு என்ற இயங்கியலில் மாவோ பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு என்று பிரித்ததை எஸ்என்என் முக்கியமான நகர்வாகக் கண்டார். மற்போர் விளையாட்டில் மோதுபவரை வெல்ல வேண்டுமே தவிர, கொல்லக் கூடாது. இது எதிராடல்தானே (agonism) தவிர, எதிர்ப்பாடல் (antagonism) இல்லை. இது போன்றது நட்பு முரண்பாடு. இயங்கியல் இவ்வாறு பன்மையுறும்போதுதான் அதிகார மையங்களின் சுய உறுதிப்பாட்டை, அதன் வன்முறையைக் களைய முடியும். எஸ்என்என் அன்பு என்பதை அதற்கு மிகவும் அவசியமான பாதையாகக் கண்டார் என்று தோன்றுகிறது.

எஸ்என்என் போல அடிப்படைக் கேள்விகளிலேயே பயணித்த சிந்தனையாளர்கள் நெருப்பைப் போன்றவர்கள். நெருப்பைப் பயன்படுத்தி நாம் உணவு சமைக்க வேண்டுமே தவிர, நெருப்பையே உண்ண முடியாது. எஸ்என்என் ஆழ்வார்களின் மெய்யுணர்வையும், மார்க்ஸின் அறவியல் நோக்கையும் தொடர்புபடுத்தினார் என்றால், நம்மில் ஆர்வமுள்ளவர்கள்தான் அந்த தொடர்புகளின் சாத்தியங்களை ஆராய வேண்டும். அதிலிருந்து நம் புரிதலுக்கும் செயல்பாட்டுக்கும் பயன் விளையுமானால் அது மானுட விடுதலை என்னும் பரந்த நிலப்பரப்பின் மற்றொரு காலடித் தடமாக மாறலாம்.

- ராஜன் குறை, ‘எதிர்புரட்சியின் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rajankurai@gmail.com

எஸ்.என்.என்.போல அடிப்படைக் கேள்விகளிலேயே பயணித்த சிந்தனையாளர்கள் நெருப்பைப் போன்றவர்கள். நெருப்பைப் பயன்படுத்தி நாம் உணவு சமைக்க வேண்டுமே தவிர, நெருப்பையே உண்ண முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x