Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

எஸ்.என்.நாகராஜன்: கேள்விகளின் நாயகர் :

சமகாலத் தமிழகத்தின் முதன்மையான அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த எஸ்.என்.நாகராஜனின் (1927-2021) மறைவு இந்த ஆண்டில் நம் சமூகம் அடுத்தடுத்து எதிர்கொண்டிருக்கும் பேரிழப்புகளில் ஒன்றாகும். நீண்ட கால வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் என்றாலும், அவருடைய தனித்துவத்தாலேயே பெரும்பாலும் தனிமைக்குள் தள்ளப்பட்டிருந்த வாழ்க்கை அவருடையது. அரசியல் இயக்கத்திலும், சமூக அமைப்புகளிலும் நாகராஜனின் கேள்விகள் அதிர்ச்சியோடு உள்வாங்கப்பட்டன. ஆயினும், நாகராஜன் முன்வைத்த தீர்வுகளோடு அவருடைய கேள்விகளை ஒப்பிட்ட இந்தச் சமூகம் ஆக்கபூர்வமாக அவற்றை எதிர்கொண்டதைக் காட்டிலும், சந்தேகத்தோடு கடந்ததே அதிகம். ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்பு அவர் எழுப்பிய பல கேள்விகளும்கூட இன்றைக்கும் புத்துயிர்ப்போடு நம் உருவெடுப்பதைக் காண்கையில், காட்டாற்று சிந்தனாமுறையிலான சிந்தனையாளர்களை எதிர்கொள்ள இன்னமுமே நமக்குப் பயிற்சி வேண்டும் என்று தோன்றுகிறது. கூடவே அறிவுத்தளத்தில் சதிக் கோட்பாடுகளுக்கும், சந்தேக முத்திரைக் குத்தல்களுக்கும் முடிவுகட்ட வேண்டியதன் அவசியத்தையும் இது சுட்டுகிறது.

வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்று கொல்கத்தாவில் இளம் அறிவியலாராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர் நாகராஜன். இயல்பாகவே அவர் கொண்டிருந்த காருண்யமானது அறிவியல் ஆய்வுகளையும்கூட அறவியல் நோக்கில் கேள்விக்குள்ளாக்கியது. வெகுவிரைவில் அறிவியல் தளத்திலிருந்து வெளியேறியவர் அரசியல் தளம் நோக்கி நகர்ந்தார். பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவுடனான சந்திப்பு, நாகராஜனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் ஆக்கியது. தான் பிறந்த ஊரான சத்தியமங்கலத்தையே அரசியல் பணிகளுக்கான களமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். மரபின் நவீனத்தைப் பின்நவீனத்துடன் இணைத்துப் பார்க்க முற்படுவதாக நாகராஜனின் சிந்தனைகளைப் புரிந்துகொள்வோர் உண்டு. கீழை மார்க்ஸியம் என்று அவர் முன்னெடுத்த கோட்பாட்டில், மார்க்ஸையும் ஆழ்வார்களையும் நாகராஜன் பொருத்திப் பார்க்க முயன்றார். கட்சிசார் சிந்தனையாளர்களிடையே இது கடுமையான அதிர்ச்சிகளை உண்டாக்கியது. நாகராஜனின் சுயவிமர்சனங்கள் அரசியலில் எதிர்த்தரப்பை வலுப்படுத்திவிடுமோ என்ற அச்சம் அவர்களிடையே நிலவியது. இது மிக விரைவில் இயக்கம்சார் அரசியலிலிருந்து அவர் வெளியேற வழிவகுத்தது. ஆயினும், அரசியல் களத்தில் மட்டுமல்லாது எழுத்து, இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பல தளங்களிலும் தொடர்ந்து நாகராஜன் செயல்படலானார். பல விஷயங்களில் அவர் முன்னோடியாக இருந்தார்; மார்க்ஸிய அறிஞர் கோவை ஞானி, இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் ஆகியோர் நாகராஜனையே தங்களுடைய வழிகாட்டியாகக் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவுலகச் செயல்பாடுகள் சார்ந்து நாகராஜன் உருவாக்கிய கட்டுடைப்புகள் முக்கியமானவை. அறிவார்த்தரீதியில் தீவிர விவாதங்களை மேற்கொண்டாலும் நடைமுறை வாழ்க்கையில் அவர் எல்லோருடனும் எளிதாக உரையாடும் தன்மை வாய்க்கப்பெற்றவராக இருந்தார். ஒரு சிந்தனையாளரின் ஒட்டுமொத்தக் கருத்துகளும் அவரது சமகாலத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அவருடைய கருத்துகளால் அவரது சமகால விவாதங்கள் எந்த அளவுக்குக் கூர்மையடைந்தன என்பதே முக்கியமானது. தன்னுடைய கேள்விகளில் நாகராஜன் என்றும் வாழ்வார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x