Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

தமிழகத்தில் விஜயதசமியன்று - கோயில் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கும் : உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை

விஜயதசமி தினத்தன்று கோயில்களைத் திறப்பது குறித்து தமிழகஅரசே முடிவெடுக்கும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

கரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய3 தினங்கள் வழிபாட்டுத் தலங்களைமூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி அக்.15 வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் வழக்கம்போல மீன் விற்பனையை அனுமதிக்கும்தமிழக அரசு, வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் கோயில்களைத் திறப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது.

எனவே, விஜயதசமியன்று கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் வழிபாட்டு தலங்களுக்கான நிலையான வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில்களை வழக்கம்போல பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி வேறு சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை அவசர வழக்காகவிசாரிக்க வேண்டும் என மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தனர். அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இதுதொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டு பிற்பகலில் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

பிற்பகலில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘நாடு முழுவதும்கரோனா ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஊரடங்கை தளர்வுகளுடன் அமல்படுத்த வேண்டும் என கடந்த செப்.21-ல் மத்திய அரசு சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. 3-வது அலையைத் தடுக்க அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு செயலாற்றி வருகிறது.

அக்டோபரில் தசரா பண்டிகையில் ஆரம்பித்து, மிலாடி நபி, நவம்பரில் தீபாவளி, டிசம்பரில் கிறிஸ்துமஸ் என ஏராளமான பண்டிகைகள் வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை(இன்று) மருத்துவ நிபுணர்களுடன்முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார். அப்போது இதுதொடர் பாகவும் ஆலோசிக்கப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், விஜயதசமி தினத்தன்று கோயில்களைத் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கும் என கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x