Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

50 ஆண்டு சட்டப்பேரவை பணியை பாராட்டி தீர்மானம் - எனக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் துரைமுருகன் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்; அனைத்து கட்சி உறுப்பினர்கள் புகழாரம்

சென்னை

அமைச்சர் துரைமுருகனின் 50 ஆண்டுகால சட்டப்பேரவை பணியை பாராட்டி பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘துரைமுருகன் எனக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்’என்று பெருமிதத்துடன் தெரிவித் தார்.

சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதம்தொடங்குவதற்கு முன், அத்துறையின் அமைச்சர் துரைமுருகனின் 50 ஆண்டுகால சட்டப்பேரவை பணியை பாராட்டும் விதமாக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டப்பேரவைக்கு அரை நூற்றாண்டுக்கும் முன்வந்தவர் துரைமுருகன்.50 ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கையில் பங்கேற்ற முக்கியமான, மூத்த உறுப்பினர் என்பதால்தான் அவையின் முன்னவராக இருந்து வழிகாட்டுகிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் மறைந்த பிறகு ஒரு மாபெரும்அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். அவரை கருணாநிதி, அன்பழகன் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.

கடந்த 1971-ல் காட்பாடி தொகுதியில் தேர்வான அவர், அதே தொகுதியில் 8 முறையும், ராணிப்பேட்டையில் 2 முறையும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இது அவையில் உள்ள யாருக்கும் கிடைக்காத பெருமை.

இந்த கூட்டத்தை அழவைக்க நினைத்தால் அழ வைப்பார்; சிரிக்கவைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார். உங்களை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்றாலும் அதையும் செய்வார். அமைதியாக இருக்கச் சொன்னாலும் இருந்து விடு வார்.

தமிழக சட்டப்பேரவையில் 1971 முதல் தற்போது வரை 10 முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அவையின் மாண்பை காப்பதில் ஒரு நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இந்த பேரவை மனதாரப் பாராட்டுகிறது. கட்சி எல்லைகளைக் கடந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘10 முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள துரைமுருகனை, கடந்த2001-ம் ஆண்டு முதல் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை முதல்வர் ஏகமனதாக நிறைவேற்றித் தரகேட்டுள்ளார். இதை பாராட்டுகிறேன். இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் அவரைப் பார்த்து செயல்பட வேண்டும். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மீது மிகுந்தபாசம் கொண்டவர் துரைமுருகன். அவர் நூறாண்டுகள் வாழ்ந்து சேவை புரிய வேண்டும்’’ என்றார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), தி.வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக), ஜெகன் மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகியோரும் துரைமுருகனை வாழ்த்திப் பேசினர்.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசும்போது, ‘‘முதல்வர் மவுரிய பேரரசர் என்றால் சாணக்கியர் துரைமுருகன்’’ என்றார்.

முதல்வர் பேசியபோது, இடையிடையே கண்ணீர் சிந்திய அமைச்சர் துரைமுருகன் தனது ஏற்புரையில், ‘‘ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியபோது வார்த்தைகளை தேடியதில்லை. இந்த தருணத்தில் வார்த்தைகளை தேடுகிறேன். கிடைக்கவில்லை. நான்நெகிழ்ந்து நிற்கிறேன். இதுபோன்றதருணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. முதல்வர் என்மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பார் என்றுநினைக்கவில்லை. அவருக்கு நான்என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’’ என்றவர், கண்ணீர் சிந்தியதுடன், மேற்கொண்டு பேச முடியாமல் நன்றி கூறி அமர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x