Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை - மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக இடஒதுக்கீடு எப்படி பொருந்தும்? : உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு, அதற்கு தமிழக இடஒதுக்கீடு எப்படி பொருந்தும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்த இடங்கள் திரும்ப மாநில அரசிடம் வழங்கப்பட்டால் மட்டுமேதமிழக இடஒதுக்கீ்டு அதற்கு பொருந்தும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் படிப்புகளில் அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிபிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசுதெரிவித்துள்ளது. இந்த 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசுகல்வி நிறுவனங்களுக்கு மட்டுமேபொருந்தும். தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு, தமிழக இடஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்’’ என கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘ஒருவேளை அந்த இடங்கள் மீண்டும் மாநில அரசு வசம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இடஒதுக்கீடு அதற்கு பொருந்தும். இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கூற முடியாது’’ என கருத்து தெரிவித்தனர்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், ‘‘மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடையும் நோக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. முற்றிலுமாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே அந்தஇடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2007-08 கல்வி ஆண்டு முதல் பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு என்பதுஅகில இந்திய ரீதியிலான கொள்கைமுடிவு என்பதால், இதற்கு மத்தியஅரசின் இடஒதுக்கீடு மட்டுமே பொருந்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசின்இடஒதுக்கீட்டை பின்பற்றினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மாநிலஅரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற கோர முடியாது’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஆக.17-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x