Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது - இந்திய தாய்த்திரு நாட்டை சிறுமைப்படுத்தும் செயல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வது நமது தாய் நாட்டை கொச்சைப்படுத்துவதுடன் சிறுமைப்படுத்துவது போல உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெய்ஹிந்த் குறித்துஈஸ்வரன் எம்எல்ஏ பேசியதை பேரவையின் அவைக் குறிப்பில்இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேசியமும், தெய்வீகமும் என்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தமிழ்நாட்டில் தேசியத்துக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடப்பதால், தமிழ்நாடு ‘திசைமாறி’ செல்கிறதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.

அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம்பகுதி 5-ன்படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர, இந்திய அரசைக் குறிக்கும் சொல் அல்ல. எனவே, ‘Union of States’ என்பதற்குப் பொருள் ‘மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்’ என்பதுதான்.

கூட்டாட்சி தத்துவம் குறித்து அண்ணா, ம.பொ.சி., ராஜாஜி ஆகிய தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்று முதல்வர் கூறுவதில் நியாயம் இல்லை. எந்த தலைவரும்ஒன்றிய அரசு என்று கூறவில்லை. எனவே, மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது என்பதுதான் யூனியன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ற வாதம்சரியானது அல்ல.

பேரவையில் இயற்றப்பட்ட பல அரசுத் தீர்மானங்களில் ‘இந்தியப்பேரரசு’ என்று, மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றிய அரசு என்றுசொல்வது தாய்நாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் உள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழகத்தின் உரிமைகளை, கோரிக்கைகளை, ஜீவாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல், இதுபோன்றசெயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

ஜெய்ஹிந்த் விவகாரம்

சட்டப்பேரவையில், ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசும்போது, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர்உரையில் இருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்றுகூறியிருக்கிறார். இப்படி கூறியதுநியாயமா, இந்திய இறையாண்மைக்கு உகந்ததா என்பதுதான் மக்களின் கேள்வி.

சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி ஜெய்ஹிந்த் என்ற சொல்இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட வெற்றிச்சொல். இதை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்குஎதிராக ஈஸ்வரன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து,நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்கள்நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x