Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு தமிழக அரசு ரூ.1.67 கோடி நிதி

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமை நடத்த ரூ.1 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 982 நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:

யானைகள் நலவாழ்வு முகாமை பிப்.1 அல்லது 4-ம் தேதி நடத்த உகந்ததாக உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 27 யானைகளுக்கு48 நாட்களுக்கு சிறப்பு நலவாழ்வுமுகாம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி 2020-21-ம் நிதியாண்டில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 982 நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

யானைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்துவிலக்கு அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், வனத்துறையின் மூலம் வசூலிக்கப்படும் இடபெயர்வு கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்தும் நிரந்தர விலக்களிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை அவசியம்

இதற்கிடையே நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் உடன் வரும் பணியாளர்களுக்கு கரோனா தொற்று இல்லைஎன்ற சான்று அவசியம் என்று அனைத்து இணை ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலையொட்டி பவானி ஆற்றுப்படுகையில், நடைபெறும் முகாமில் பங்கேற்கும் யானைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்ற பிறகே, யானைகளை முகாமுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், யானைகளுடன் வரும் அனைத்து பணியாளர்களுக்கும் 24 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று உறுதி செய்த சான்று பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x