Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கம்

ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்குவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி. பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி போன்ற பனிக்காலத்தில் ஆடும் விளையாட்டுகளைக் கொண்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டி, கடந்த 1924-ம் ஆண்டில் இந்த நாளில்தான் (ஜனவரி 25) தோன்றியது.

ஆரம்பத்தில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், பனிக்காலத்தில் ஆடும் ஆட்டங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச அளவில் எழுந்தன. இதைத் தொடர்ந்து 1921-ம் ஆண்டில் கூடிய ஒலிம்பிக் கமிட்டி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது.

தொடக்கத்தில் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவை ஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாத நாட்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா என்ற கேள்வி எழ, இந்த முறை மாற்றப்பட்டது. இதன்படி 1924-ம் ஆண்டு முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் நாட்டில் உள்ள சமோனிக்ஸ் என்ற இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 16 நாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் ஜேட்ரா என்பவர் 500 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று குளிர்கால ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை வென்றார். ஆரம்பத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல பல நாடுகள் இதில் பங்கேற்கத் தொடங்கின. கடந்த 2018-ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் 92 நாடுகளை சேர்ந்த 2,925 வீரர்கள் பங்குகொண்டனர். நைஜீரியா, சிங்கப்பூர், ஈக்வடார், எரித்ரியா, மலேசியா ஆகிய நாடுகள்கூட முதல்முறையாக அப்போது பங்கேற்றன. 1964-ம் ஆண்டுமுதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை ஒரு பதக்கம்கூட வென்றதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x