Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் சுகாதார தீர்வு அளிப்பதாக 2021 இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பேசினார்.

புதுடெல்லி

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர், ‘‘உலக சுகாதார துறையின் நரம்பு மண்டலமாக இந்தியா உருவெடுத்துள்ளது’’ என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ரூ.1,195 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்குபிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், முதல்வர் விஜய் ருபானி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2022-ம் ஆண்டு மத்தியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 750 படுக்கைகள் மற்றும் 125 எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்டதாக இம்மருத்துவமனை இருக்கும்.

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

எதிர்கால ஆரோக்கியத்தில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும். தேவை ஏற்படும்போது தனது திறனை விரிவுபடுத்திக் கொள்வதற்கான ஆற்றலை நம்நாடு நிரூபித்துள்ளது. உலக சுகாதார துறையின் நரம்பு மண்டலமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சுகாதார சவால்கள் நிறைந்ததாக 2020-ம் ஆண்டு இருந்தது. சுகாதாரத் தீர்வுகள் அளிப்பதாக 2021-ம்ஆண்டு இருக்கும் என நம்புகிறேன்.எங்களை பாதுகாக்க தங்கள் உயிரை பணயம் வைத்துள்ள அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் 2020-ம் ஆண்டின் கடைசி நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்கு பிறகும் நம்மால் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை மட்டுமே உருவாக்க முடிந்தது.2003-ல் மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க வாஜ்பாய் அரசு முயற்சி எடுத்தது. கடந்த 6 ஆண்டுகளில் மேலும் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.

அதிக மக்கள்தொகை கொண்டநம் நாட்டில் 1 கோடி பேர் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வென்றுள்ளனர். இப்பணியில் மற்ற நாடுகளை விடவும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் தடுப்பூசி பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதில் காட்டிய அதே ஒற்றுமையுடன் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை நோக்கி நாடு முன்னேறும் என நம்புகிறேன்.

சமீபத்திய ஆண்டுகளில் மக்களுக்கு சுகாதார வசதிகள் அதிகம் கிடைக்கின்றன. நாட்டில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அரசின் திட்டங்களும் அவை தொடர்பான விழிப்புணர்வும் முக்கியப் பங்குவகிக்கின்றன. இந்திய சிறுமிகளின்கல்வியில் இத்திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை நிபுணர்கள் ஆராயவேண்டும். பள்ளிகளில் இருந்துபெண் குழந்தைகள் இடையில் வெளியேறும் விகிதம் குறைந்த தற்கு இந்த திட்டங்கள் முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x