Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் அச்சம் தேவையில்லை புயல் பாதிப்புள்ள மாவட்டத்தில் 4-ம் தேதி வரை வெளியே வரவேண்டாம் பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் அச்ச மடையத் தேவையில்லை. புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் 4-ம்தேதி வரை வெளியில் வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் பழனிசாமிதலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம்,துறை செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் நிலையை உணர்ந்து அதற்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் புயல் ஏற்பட்டு வந்தாலும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி மக்களை காத்து வருகிறோம். அதேபோல் தற்போது வரும் புயலால் மக்களுக்கு பாதிப்பு,சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ‘நிவர்’ புயலால் ஏற்பட இருந்த அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறைக்கப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு அறிவுரைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

 வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகள் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் போதிய எரிபொருள், லாரி, மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றுடன் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முகாமிட வேண்டும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி,திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிக்க வேண்டும்.

 பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மின்வாரியம் சார்பில் கூடுதலாக ஆயிரம் மின்கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கடத்திகளை பிற மாவட்டங்களில் இருந்து பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பில்லா வீடுகளில் வசிப்போரை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு உணவு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை உறுதி செய்வதுடன், கரோனாதொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினிகள், முகக் கவசங்களை இருப்பு வைப்பதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும்.

 தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் உடனுக்குடன் வெளியேற்றுவதுடன், திடக்கழிவுகளையும் அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் வழங்க, நீர் தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து வைக்க வேண்டும்.

 நீர் நிலைகளின் கொள்ளளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

 டிச.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக் கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

 ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அண்டை மாநில கடற்பகுதிக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை, வங்கி கணக்குபுத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 அதிகாரப்பூர்வ, நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்க வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் புயல் குறித்து எவ்வித அச்சமும் அடையதேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x