Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அதிகாரத்தை குறைக்கிறது மத்திய அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, மாநில சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2006-ம் ஆண்டு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து, வரைவு அறிவிக்கையை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

இதுதொடர்பாக தனது நிலையை தெரிவிக்க தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் மற்றும்வனத் துறை செயலர் தலைமையில் 12 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு,வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தொடர்பாக தனது கருத்தை கடிதம் மூலம்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பி2 என வகைப்படுத்தப்பட்ட சிமென்ட், பெட்ரோலியம், தோல், சாயத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சிறு, குறுமற்றும் நடுத்தர நிறுவன திட்டங்களுக்கான அனுமதியை மாநிலசுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு பரிசீலிக்காமல் அனுமதிவழங்கலாம் என்ற திருத்தத்தை ஏற்க முடியாது.

சுரங்கம், நீர்ப்பாசனம், அணுமின் திட்டங்கள் அல்லாத பிற திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் காலஅவகாசத்தை 10ஆண்டுகளாக உயர்த்தியதை நீக்க வேண்டும். திட்ட அமைவிடத்தில் வெகுவிரைவாக மாற்றங்கள் நிகழும் என்பதால் சுற்றுச்சூழல் அனுமதியின் காலஅவகாசம் 7 ஆண்டுகளுக்கே வழங்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பாக திட்ட அமைவிடத்தில் சுற்றுச்சுவர் கட்டஅனுமதிக்கக் கூடாது. வேலி போட மட்டுமே அனுமதிக்கலாம்.

சுரங்கத் திட்டங்களின் ஆயுட்காலத்தை 30 ஆண்டுகளுக்கு பதிலாக 50 ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுரங்கத் திட்ட அனுமதியின் அடிப்படையில் சுரங்கத்தின் ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க முடியும்.

மொத்தத்தில் இந்த புதிய அறிவிக்கை, மாநில சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ளது. இது பல திட்டங்களை கண்காணிக்கவோ, முறைப்படுத்தவோ முடியாமல் செய்துவிடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x