Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் மூலம் சென்னைக்கு தினசரி 66 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் 5-வது நீராதாரமாக அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை

முதல்வர் பழனிசாமி தலைமையிலான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நாளை அர்ப்பணிக்கப்படும் கண்ணன் கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் மூலம் சென்னைக்கு தினசரி 66 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரூ.380 கோடியில் நிறைவேற்றம்

சென்னையில் அதிகரித்து வரும் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்கெனவே உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 நீர்த்தேக்கங்களுடன் 5-வது நீர்த்தேக்கமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் ரூ.380 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது.

இந்த நீர்த்தேக்கத்துக்காக 1,485.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நீர்தேக்கத்தின் மூலம் ஏற்கெனவே பாசன வசதிபெற்ற கண்ணன்கோட்டை, ராஜனேரி மற்றும் தேர்வாய்கண்டிகை பெரிய ஏரிகளின் நஞ்சை நிலங்களான 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற 5 மதகுகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீருக்காக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு சேமிப்பு நீரில் நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீரை 1,100 ஏக்கர் பரப்பளவில் 2 முறையாக வருடத்துக்கு 1,000 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையினால் நீர்த்தேக்கத்தில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட் டுள்ளது.

சென்னைக்கு மாதம் ஒன்றுக்கு1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வழங்கும் 4 நீர்தேக்கங்கள் மூலம் 11 டிஎம்சி நீர் என்பது இப்பொழுது 11.75 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. 76 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் சிறப்பானசெயல்பாடுகளையும் பாராட்டிமத்திய ஜல்சக்தித் துறை தமிழகத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதை வழங்கி பாராட்டி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x