Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து தமிழக கோயில் சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு சிலை கடத்தல் தடுப்பு ஏடிஜிபியிடம் மத்திய அமைச்சர் ஒப்படைத்தார்

நாகை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட சுவாமிசிலைகள் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்தராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகள் கடந்த 1978-ல்கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து அப்போதைய கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் கொடுத்தபுகாரின்பேரில், போலீஸார் வழக்குபதிவு செய்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு, சிலைகளை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சிலைகள் யாருக்கு விற்கப்பட்டன என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இந்திய புராதனப் பொருட்கள் ஏலம் விடப்படஉள்ளதாக விளம்பரம் வெளியானது. அதுகுறித்து ஆய்வு செய்ததில், அவை அனந்தமங்கலம் கோயிலில் திருடப்பட்ட சுவாமி சிலைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் இந்திய அரசு சார்பில் சிலைகளுக்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த அருங்காட்சியக நிர்வாகிகள், சிலைகளை இந்தியாவிடம் தர ஒப்புக்கொண்டனர். அதன்படி, மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலிடம் அந்த சிலைகளை இங்கிலாந்து அரசு வழங்கியது.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் அந்த சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம் ஒப்படைத்தார். ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய 3 சிலைகளும் விமானம்மூலம் இன்று (நவ.19) சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன. பின்னர், அந்த சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் வைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் ஆஞ்சநேயர் சிலை

3 சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், 10 கைகள் கொண்ட தசபுஜ ஆஞ்சநேயர் சிலை மட்டும் இன்னும்மீட்கப்படவில்லை. இந்த சிலை சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x