Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

வடகிழக்குப் பருவமழை தீவிரம் 33.63 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மும்முரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 33 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், இதுவரை 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டுஇதே காலகட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டதை விட இது 1 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் அதிகமாகும். மேலும், கடந்த 30 ஆண்டுகளில் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பளவு இதுவாகும்.

டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 15 லட்சத்து 99 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் 17 லட்சத்து 64 ஆயிரம் ஏக்கரில் இதுவரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

4% சாகுபடி பரப்பு அதிகரிப்பு

இதர வேளாண் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் முறையே 19 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கர், 9 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர், 7 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 36 லட்சத்து 59 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் கரும்பு 4 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பைவிட 3 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் அதிகமாகும். அதன்படி 4 சதவீதம் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சாகுபடிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நெல் விதைகள் 30,438 மெட்ரிக் டன்னும், பயறுவிதைகள் 3,030 மெட்ரிக் டன்னும்,எண்ணெய் வித்துகள் 1,044 மெட்ரிக் டன்னும், சிறுதானிய விதைகள் 2,320 மெட்ரிக் டன்னும்தயாராக உள்ளன.

உரத்தைப் பொருத்தவரை யூரியா 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 மெட்ரிக் டன்னும், டிஏபி 51 ஆயிரத்து 310 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 86 ஆயிரத்து 560 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 4 லட்சத்து 34 ஆயிரத்து 360 மெட்ரிக் டன் உரங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x