Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

‘அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் வழங்கட்டும்’ ஆளுநர், முதல்வர், தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்து

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தீபாவளித் திருநாளானது அவநம்பிக்கையை வெல்லும் நம்பிக்கையாகவும், தீமையை வெல்லும் நன்மையாகவும், இருளை வெல்லும் ஒளியாகவும் திகழ்கிறது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்துக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் நல்லிணக்கத்தையும் அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் இந்நாள் வழங்கட்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்றபாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து, நாம் வாங்கும் பொருட்கள், எளிமையான, எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்.

முதல்வர் பழனிசாமி: தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது. தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இல்லங்கள் தோறும் தீப ஒளி ஏற்றி, இருள்அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கரோனாவுக்கான ஆற்றல்மிகு தடுப்பூசி கண்டுபிடித்தாகிவிட்டது என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தன்னலமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதான் தீபாவளி. அடுத்தசில மாதங்களில் தமிழக மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து அதிமுகவின் நல்லாட்சி தொடரும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: உலகத்தில் உள்ள தீய செயல்களைப்போக்கி, நற்செயல்களை நிலை நாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தீபாவளி பண்டிகை உலகெங்கும் சாதி, மத, பேதமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இதிகாசகால நரகாசுரன் அழிந்தாலும், இன்னும் பல நரகாசுரர்கள் மத்தியில் சிக்கி அல்லல் படும் நம் மக்கள் விரைவில் மீண்டு, மகிழ்வோடு வாழ இந்நாளில் சபதம் ஏற்போம்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: அதர்மம் அழிந்து இறுதியில் தர்மமே வெல்லும் என்று உயர்ந்த தத்துவத்தை போதிக்கும் திருநாளே தீபாவளி பண்டிகை. இந்நாளில் துயரங்கள் அனைத்தும் விலகி மக்கள்அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத்தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித்திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தீமையை அகற்றி நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும்ஒளித் திருநாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. துயரங்கள் விலகி மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலவ அனைவருக்கும் தேமுதிக சார்பில் தீபாவளி வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவரது இல்லத்திலும் இன்னல் நீங்கி, மகிழ்ச்சிபொங்க வாழ்த்துகள். கரோனாவால் சந்தித்த பெரும் துயரங்களை மறந்து, மன உறுதியோடு கடுமையாக உழைப்போம். இழந்த மகிழ்ச்சி,பொருளாதாரத்தை மீண்டும் பெறுவோம். வறுமை நீங்கி வளம் பெறுவோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

சு.திருநாவுக்கரசர் எம்பி: அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அறியாமை, வறுமை, தீமை, வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருக வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அதர்மம் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்காது. ஒரு நாள் அகங்காரம் வீழ்ந்து தர்மம் தலையெடுத்தே தீரும் என்று தத்துவத்தை போதிக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஒற்றுமையும், சகோதரத்துவமும் பெருகினால்தான் மட்டற்ற மகிழ்ச்சி பெருகும். அத்தகைய மகிழ்ச்சி மலையளவு உயரக்கூடிய உன்னத திருவிழாவாக தீபஒளி மாற வேண்டும். அதற்கு மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர இந்நாளில் வாழ்த்துகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய மக்களாகிய நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்றஉணர்வில் ஒன்றிணைய வேண்டும். சமத்துவம், சமூகநீதி, சமதர்மம், சமூக நல்லுறவு,நல்லிணக்கத்திலும் உள்ளங்களால் ஒன்றுபடுவோம்.

கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: சாதி மதங்களை கடந்து அனைத்துதரப்பு மக்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டுமென்று இந்த தீபாவளி திருநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

பாரிவேந்தர், எம்பி: மனிதர்களுக்குள் குடிகொண்டிருக்கும் ‘தீயசக்தி’ எனும் அரக்கனைக் கொன்று, ‘ஆக்கசக்தி’ எனும் நற்குணத்தை வாழ வைப்பதே தீபாவளித் திருநாளின் சாராம்சமாகும். ஆக்கசக்திகள் வளர நாம் அனைவரும் அரும்பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சமக தலைவர் ஆர்.சரத்குமார்,மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகிலஇந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் மார்ட்டின், முன்னாள் எம்எல்ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x