Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்துக்கான அனுமதி வழங்க முடியாது மத்திய அரசுக்கு உயர்கல்வித் துறை கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்துக்கான அனுமதியை வழங்க முடியாது என்றுமத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ்) திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது. இதுதொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர்கள் மற்றும் 3 செயலர்கள் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசுஅமைத்தது. சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தால் தேவைப்படும் கூடுதல் நிதி, 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை இக்குழுஆராய்ந்தது.

துணைவேந்தர் சுரப்பா கடிதம்

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டில் ரூ.1,575 கோடி திரட்ட முடியும். எனவே, தாமதமின்றி சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு துணைவேந்தர் சுரப்பா கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையானது. துணைவேந்தர் சுரப்பா தன்னிச்சையாக செயல்படுவதாக தமிழக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து பெற்றால்இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் அதை ஏற்கப்போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் வாயிலாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தக் கடிதத்தில், ‘துணைவேந்தர் சுரப்பா கூறியதுபோல, நிதியைத் திரட்ட முடியாது. கடந்தஆண்டு ரூ.350 கோடி நிதிப் பற்றாக்குறையை அண்ணா பல்கலை.எதிர்கொண்டது.மேலும், இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அனுமதியை தரமுடியாது. உலக அளவில் அண்ணா பல்கலை. தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு முன்னெடுக்கும்’ என கூறப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x