Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

கரோனா 2-வது அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நவ.16-ல் பள்ளிகளை திறக்கக் கூடாது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

கரோனா 2-வது அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நவ.16-ம் தேதி பள்ளிகளை திறக்கக் கூடாது என்று திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா 2-வது அலை வீசும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ‘‘9 முதல் 12-ம்வகுப்புகளுக்கு நவ.16-ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்’’ என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பால் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து, இஸ்ரேல், தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு குறித்துஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், “தொடக்கப் பள்ளிகளைவிட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று எச்சரித்துள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தொடர்உடல் பரிசோதனை, அடிக்கடி கைகழுவுதல் போன்ற நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகளில் எந்த அளவுக்கு செயல்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

தவிர, வடகிழக்குப் பருவமழையும், அதன் விளைவாக ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகள், பருவகால நோய்கள் எல்லாம் கரோனா தொற்றுடன் சேர்ந்துகொண்டு மாணவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றுமருத்துவர்கள், மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பல்வேறு தரப்பினர் ஆலோசனை

“2021 ஜனவரி இறுதியில் அப்போதைய சூழ்நிலைகளை ஆய்வுசெய்து பள்ளிகளை திறக்கலாம்” என்று மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். மாணவச் செல்வங்களின் உயிர்பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதல்வருக்கு நினைவூட்டுகிறேன். எனவே, பள்ளிகள் திறப்பு குறித்துபெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். நவ.16-ல்பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினகரன் வேண்டுகோள்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாணவர்கள், பெற்றோரின் மனநிலையையும், கரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு,எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுப்பது சரியல்ல. ‘தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் சொன்ன அதே நாளில்,பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார்.மிக முக்கிய பிரச்சினையில்கூட ஏன் இவ்வளவு குழப்பம் என்றகேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. ஆட்சியாளர்கள் இதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x