Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

தீவிரவாத, மதவாதத்தை எதிர்க்க வேண்டும் : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப் பின் உறுப்பு நாடுகள் தீவிரவாதம், மத தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள்இணைந்து ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2001-ம்ஆண்டு அமைப்பு (எஸ்சிஓ) ஒன்றை நிறுவின.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டன. இந்தஅமைப்பின் மாநாடு நேற்று தஜிகிஸ்தான் தலை நகர் துஷான்பேயில் நடைபெற்றது. மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தினார். நேரடியாகவும், காணொலிமுறையிலும் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் உயர் மட்டக் குழு பங்கேற்றது. இந்த குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். காணொலி முறையில் மாநாட்டில் பங்கேற்ற மோடி, மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மத்திய ஆசியாவுடனான தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவின் பரந்த சந்தையுடன் இணைப்பதன் மூலம் பெரும் நன்மை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க இதுவேசரியான நேரம் என்று நினைக்கிறேன். அமைதி, பாதுகாப்பு நம்பிக்கையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகப்பெரிய சவால்கள் நமக்கு எதிரே உள்ளன. இந்த பிரச்சினைகளின் அடிப்படை காரணம் தீவிரவாத மயமாக்கல்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகள், பயங்கர வாதம் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் மத தீவிரவாதத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தீவிரவாதம் மற்றும்அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பொதுவான வழிமுறைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.

அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் நாம் மதிக்கவேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் தீவிரவாதத்தையும் மத தீவிர வாதத்தையும் எதிர்த்து போராட வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக நேரில் கலந்து கொண்டார்.

மாநாட்டின்போது, ஈரான் புதியஉறுப்பினர் நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டது. அதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்தார். சவுதி அரேபியா,எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளை விவாத உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருப்பதையும் பிரதமர் மோடி தனது உரையின்போது பாராட்டினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x