Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

அமெரிக்க ராணுவ சீருடை, வாகனங்கள் ஆயுதங்களை பயன்படுத்தும் தலிபான்கள் :

வாஷிங்டன்

அமெரிக்காவின் ராணுவ சீருடை, வாகனங்கள், ஆயுதங்களை தலிபான்கள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பினர் சுலபமாக ஆட்சி அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சண்டையின்போது, அரசு படையினரிடமிருந்து ஏராளமான நவீன ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை கைப்பற்றினர். இவற்றில் பெரும்பாலானவை கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கியவை ஆகும்.

அமெரிக்காவில் தயாரான எம்4 மற்றும் எம்18 ரக துப்பாக்கிகள், எம்24 ஸ்னைப்பர் ஆயுதங்களை வைத்துள்ள தலிபான்கள், அமெரிக்க ராணுவ சீருடையுடன் ஹம்வீஸ் வாகனங்களில் வலம் வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், சுமார் 40 ஆப்கன் போர் விமானங்கள் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறும்போது, “ஆப்கனில் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் எங்கே உள்ளன என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவற்றை எங்களிடம் திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை” என்றார்.

ஆப்கனிலிருந்து ராணுவத்தை விலக்கி கொள்ளும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முறையாக செயல்படாததே இந்த நிலைக்கு காரணம் என்று எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கடந்த ஓராண்டில் பெரும்பாலான ராணுவ தளவாடங்களை ஆப்கனிலிருந்து அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட்டது. ஆனால் ஆப்கன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சில ஆயுதங்கள் இப்போது தலிபான்கள் வசம் சென்றிருப்பதால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x