Published : 11 Jul 2021 03:12 AM
Last Updated : 11 Jul 2021 03:12 AM

சுற்றுலா தலங்களில் குவியும் கூட்டத்தால் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுக்கும் : மத்திய அரசு எச்சரிக்கை

சுற்றுலா தலங்களில் குவிந்து வரும் கூட்டத்தால் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் பெரும்பாலான மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பல சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் பெருகி வருகிறது.

அந்த வகையில், உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள கெம்ப்டி நீர் வீழ்ச்சியில், நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் எந்தவித கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதுபோன்ற நடவடிக்கைகள் கரோனா மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்களும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லவ் அகர்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அவர்கள் கூறியதாவது:

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், கரோனா வைரஸ் ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாக மக்கள் நினைக்க வேண்டாம். கரோனா பரவல் கட்டுக்குள் தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இதனை மக்கள் உணர வேண்டும். சுற்றுலா பகுதிகளுக்கு கூட்டமாக செல்வது; முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க காரணமாகி விடும். பல இடங்களில் சுற்றுலா பயணிகள் கரோனா அச்சமின்றி மிக அலட்சியமாக நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இது மிக ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும்.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பல் 53 சதவீத தொற்று, கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் பதிவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, 15 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில் 80 சதவீத தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன. சில வாரங்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிராவில் தினசரி கரோனா பாதிப்பு 6,740-ஆக குறைந்திருந்தது. ஆனால், தற்போது அது 9,083-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல, கேரளாவிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. 66 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், கரோனா தொற்றை நாம் முழுமையாக வெற்றிக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. மீண்டும் பெருந்தொற்று பரவலுக்கான எச்சரிக்கை மணியாகவே இதனை நாம் கருத வேண்டியுள்ளது.

எனவே, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் கரோனா தொற்று நம்மை விட்டு சென்றுவிட்டதாக பொதுமக்கள் எண்ணி விட வேண்டாம். சிறிது அலட்சியமும் நம்மை பெரிய விலை கொடுக்க செய்துவிடும் என்பதை யாரும் மறக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x