Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM

ஆசிய குத்துச்சண்டை போட்டி - 10 பதக்கங்களை வென்றது இந்திய மகளிர் அணி :

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர்.

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் மகளிருக்கான 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் பூஜா ராணி தங்கம் வெல்வது இது 2-வது முறையாகும். முன்னதாக 51 கிலோ எடைப் பிரிவில் 5 முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் 2-3 என்ற கணக்கில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றகஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பேவிடமும் 64 கிலோ எடைப் பிரிவில் லால்பூட்சைஹி 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் மிலனா சஃப்ரோனோவாவிட மும் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இதேபோன்று 81கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனுபமா 2-3 என்றகணக்கில் கஜகஸ்தானின் லாசாத் குங்கீபேயேவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

அதேவேளையில் 60 கிலோ எடைப் பிரிவில் சிம்ரன்ஜித் கவுர், 69 கிலோ எடைப் பிரிவில் லோவ்லினா போர்கோஹெயின், 57 கிலோ எடைப் பிரிவில் ஜாஸ்மின், 54 கிலோ எடைப் பிரிவில் சாக்சி சவுத்ரி, 48 கிலோ எடைப் பிரிவில் மோனிகா, 81 கிலோ எடைப் பிரிவில் சவீதி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x