Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 16 நோயாளி, 2 செவிலியர் உயிரிழப்பு :

குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 கரோனா நோயாளிகளும் 2 செவிலியர்களும் உயிரிழந்தனர்.

குஜராத்தின் பரூச் நகரில், பாம்பே படேல் நலச் சங்கம் சார்பில் ‘பரூச் வெல்பேர் மருத்துவமனை’ செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நான்கு தளங்களை கொண்ட இந்த மருத்துவமனையில் சுமார்70 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சுமார் 25 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட புகையால் 16 நோயாளிகளும் 2 செவிலியர்களும் உயிரிழந்தனர்.

தீவிபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தீவிபத்தை தொடர்ந்து அதுபற்றி விசாரிக்க 2 உயரதிகாரிகளை முதல்வர் விஜய் ருபானி உடனே அங்கு அனுப்பி வைத்தார். மேலும் இத்துயர சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அவர் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் ருபானி தனது ட்விட்டர் பதிவில், “பரூச்மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி துயரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “பரூச்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். துயரம் அடைந்துள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x