Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

வளரும் பொருளாதார நாடாக மாற்ற `விலங்குகளின் உத்வேகத்தை' வெளிப்படுத்துங்கள் தொழில்துறையினரிடம் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

இந்தியாவை விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு தொழில்துறையினர் விலங்குகளிடம் காணப்படும் உத்வேக குணத்தைப் போன்று தீவிரமாக செயல்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அகில இந்திய நிர்வாகவியல் சங்கக் கூட்டத்தில் நேற்று பேசிய அவர், சர்வதேச பொருளாதார மேதை ஜான் மேனார்டு கீன்ஸ் சுட்டிக் காட்டிய "விலங்குகளின் உத்வேகம்" என்ற பதத்தை பயன்படுத்தினார். இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

தொழில்துறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளையும். சலுகைகளையும் வழங்கி வருகிறது. முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நிறுவன வரி 22 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இவ்விதம் நிறுவன வரி குறைக்கப்பட்ட பிறகு முதலீடுகள் பெருகும் என எதிர்பார்த்தோம். அதேபோல தனியார் முதலீடுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். இனிவரும் காலங்களில் தனியார் முதலீடுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என நம்புகிறோம். அதுவும் விலங்குகளின் உத்வேகம் போன்று அதிகரிக்கும் எனவும், இந்தியாவும் விரைவாக வளரும் பொருளாதார நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த உத்வேகம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். இதை முழுவதும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு தொழில்துறையினருக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்துறையினரின் பங்களிப்பு, உங்களது ஈடுபாடு, நீங்கள் அளித்த யோசனைகள் ஆகியவை அனைத்தையும் செயல்படுத்த வேண்டிய நேரமிது. இதன் மூலம் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு இந்த உலகிற்கே உதாரணமாக இந்தியா திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நோக்கமே தனியார் முதலீடுகளை ஈர்த்து அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பங்கு விலக்கல் நடவடிக்கையில் நிறுவனத்துக்கு யார் உரிமையாளர் என்பதில் பிரச்சினையாகி அதுவும் வெற்றிகரமானதாக அமையவில்லை. பொதுமக்களின் வரிப்பணம் உபயோகமான வழியில் செலவிடப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதால்தான், திறமையாக நடத்துபவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

வங்கி, மின்துறை, பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உரிய முதலீட்டாளரை ஈர்க்கும் வகையிலான கொள்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அணு சக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள், காப்பீடு, நிதி சேவை உள்ளிட்டவற்றிலும் உத்திசார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அத்தியாவசியம் அல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதால் அதை மூடும் முடிவுக்கு அரசு வந்துவிட்டதாக அர்த்தமல்ல. அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். மேலும் நிலக்கரி, உருக்கு, தாமிரம் போன்ற பொருள்கள் நமக்கு மிகவும் அவசிய தேவையாகும். இதுபோன்ற பல துறைகள் பல ஆண்டுகளாக அரசின் வசம் உள்ளது. இவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும்போது அதன் வளர்ச்சி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிப்பதால் பொருளாதாரமும் வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு அனைத்து தொழில்களுக்கும் ஊக்க சலுகை தேவைப்படுகிறது. இது அடுத்த ஆண்டும் தேவைப்படலாம். ஏனெனில் வளர்ச்சியானது ஸ்திரமானதாக தொடர வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். கட்டமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளில் அரசின் செலவினம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

வரும் ஆண்டில் ரூ 12.06 டிரில்லியன் தொகையை கடனாக பெற அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஒவ்வொரு நாட்டின் கடனை திருப்பி செலுத்தும் திறன் உள்ளிட்டவை மாறியுள்ளன. இதனால் தரச்சான்று நிறுவனங்களின் மதிப்பீடு முறை மாறுபடும். இது அனைத்து நாடுகளுக்குமானது. ஒவ்வொரு நாடும் தங்களது பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட தேவையான நடவடிக்கைகளை எடுத்தே தீரும் என்று அவர் கூறினார்.

இருப்பினும் அரசு நிதிப்பற்றாக்குறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6 சதவீதத்துக்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். 2021-22-ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறை 6.8 சவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21-ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து 12 நாள்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசிய அவர் இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் கலந்து பேசி விலையை குறைக்கலாம் என்றார். கடந்த 12 நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.63 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.84 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x