Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

புனேயில் இருந்து 9 விமானங்களில் 13 நகரங்களுக்கு 56.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைப்பு

புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து முதல்கட்டமாக 56.5 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் 9 விமானங்கள் மூலம் 13 நகரங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து கோவிஷீல்டு எனப்படும் கரோனா தடுப்பூசி மருந்துகள் 13 நகரங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தகவலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் தெரிவித்தார். முதல்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, குவாஹாட்டி, ஷில்லாங், அகமதாபாத், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், பாட்னா, லக்னோ, சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, ஒவ்வொன்றும் 32 கிலோ எடை கொண்ட 478 பெட்டிகளில் குளிர்பதனப்படுத்தப்பட்ட மூன்று லாரிகளில் இந்த மருந்துகள் பாதுகாப்பாக புனே விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. மருந்துகளை ஏற்றிக் கொண்டு முதலில் ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லிக்கும் பின்னர் கோ ஏர் விமானம் சென்னைக்கும் புறப்பட்டுச் சென்றன.

டெல்லி விமான நிலையத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ள விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மருந்துகள் 2 லாரிகள் மூலம் டெல்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது. குஜராத்தில் தடுப்பூசி மருந்துகள் கொண்ட முதல் பெட்டி வந்தவுடன் துணை முதல்வர் நிதின்பாய் படேல் தேங்காய் உடைத்து சடங்குகள் மேற்கொண்டார்.

சுகாதார செயலாளர் தகவல்

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “புனேயில் இருந்து விமானங்கள் மூலம் 13 நகரங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி வரையில் 54.72 லட்சம் தடுப்பூசிகள் மத்திய மற்றும் மாநில அளவிலான மருந்து சேமிப்பு கிடங்குகளில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் புனேயின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.1 கோடி தடுப்பூசிகளும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் தடுப்பூசிகளும் 14-ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பெற்றுக் கொள்ளும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x