Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

காங்கிரஸை விட்டு விலகி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு நடிகை விஜயசாந்தி பாஜக.வில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த வாரம் விலகிய நடிகை விஜயசாந்தி (54) நேற்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த 1980-90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

1997-ல் இவர் பாஜக.வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். அக்கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் 2009-ல் அதனை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 2014-ல் டிஆர்எஸ் கட்சியை விட்டு விலகிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அவர் தீவிரம் காட்டவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால் அவர் அதிருப்தி அடைந்தார். மேலும் கட்சியில் தாம் ஓரம் கட்டப்படுவதாக கருதினார். இதனால் கடந்த வாரம் அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் நேற்று பாஜக.வில் முறைப்படி இணைந்தார்.

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பாஜக.வில் இணைந்து வருகின்றனர். தென்னிந்திய பிரபல நடிகை குஷ்பூ சமீபத்தில் காங்கிரஸை விட்டு விலகி பாஜக.வில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது விஜயசாந்தி, காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

மொத்தம் 150 உறுப்பினர்களைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, கிட்டத்தட்ட ஆளும் கட்சிக்கு இணையான வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் வேளையில் அக்கட்சியில் விஜயசாந்தி இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x