Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

தி.மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு - நாளை முதல் தற்காலிக பேருந்து நிலையங்கள் : முடிவை மறுபரிசீலனை செய்ய ஆட்சியருக்கு கோரிக்கை

திருவண்ணாமலையில் கார்த் திகை தீபத் திருவிழாவை முன் னிட்டு 10 நாட்களுக்கு மேலாக தற்காலிக பேருந்து நிலை யங்களை செயல்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். பவுர்ணமி மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நாளில், திருவண்ணா மலை நகரின் சுற்று வட்ட பாதையில் அமைக்கப்படும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் அனைத்து பேருந்துகளும் நிறுத் தப்படும். மேலும் பக்தர்களின் நலன் கருதி, தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகரை இணைக்கும் வகையில் இனைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்தாண்டு, கரோனா உச்சத்தை எட்டி இருந்த நிலையிலும், இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதேநேரத்தில் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

ஆனால் இந்தாண்டு, போக்கு வரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் முடிவு செய்துள்ளார். அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெறும் நவம்பர் 10-ம் தேதி (நாளை) முதல் விழா நிறைவு பெறும் வரை, நகரின் உள்ளே இயங்கி வரும் மத்திய பேருந்து நிலையத்தை மூட முடிவு செய்துள்ளார். ஈசான்ய மைதானம், திருக்கோவிலூர் சாலை, காஞ்சி சாலை மற்றும் செங்கம் சாலை என நான்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நகரின் உள்ளே பேருந்துகள் வருவது தடுக்கப்பட உள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகரை இணைக்கும் வகையில் இலவச சேவை அடிப்படையில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரியவருகிறது.

10 நாட்களுக்கு மேலாக தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பட்டால், கிராமங்களில் உள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து நிலையில் உள்ள வணிகர்கள், அரசு மற்றும் தனியார் பணிக்கு வெளியூர்களுக்கு சென்று வரும் ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். மேலும், திருவண்ணாமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் வெளியூர் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, அனைத்து தரப்பு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஆட்சியர் பா.முருகேஷ் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து வணிகர்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, “கரோனா தொற்று பரவலை மேற்கொள்காட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

ஆன்லைனில் பதிவு செய்துள்ள வெளியூர் பக்தர்கள் மற்றும் அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டுமே, சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுகின்றனர். மேலும், 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்லவும் தடை விதித்துள்ளனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.

இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், 10 நாட் களுக்கு மேலாக தற்காலிக பேருந்து நிலையங்களை இயக்க முடிவு செய்து இருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்தாண்டு கடை பிடிக்கப்பட்ட வழிமுறைபடி, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முதல் நாளில் (18-ம் தேதி) இருந்து தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட ஆட்சியர் பா.முருகேஷ் அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x