Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

தமிழகத்தில் அக்.31-க்குள் தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்த - வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் அக்.31-ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர்நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை 13-ம் தேதி நான்எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி போடும் பணி தொடங்கிய காலகட்டத்தில் முதல் 4 மாதங்களில் தமிழகத்துக்கு போதிய அளவில் தடுப்பூசி தரப்படவில்லை. எனவே, தடுப்பூசி போடுவதில் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவான நிலைதற்போதும் தொடர்கிறது.

தமிழக அரசு சிறப்பான முயற்சிகளை எடுத்து வரும் போதிலும்,வழங்கப்படும் தடுப்பூசிகள் 2 அல்லது 3 நாட்களில் காலியாகி விடுகின்றன. எனவே, தமிழகத்துக்குமுந்தைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தினசரி செலுத்தப்படும் தடுப்பூசி தவிர, இரண்டு சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்தசெப்.12-ம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19-ம் தேதி 16.43 லட்சம்பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 1 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

குறைவான ஒதுக்கீடு

தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ள சூழலிலும், மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தொடர்ந்து குறைந்த அளவு ஒதுக்கீடே பெற்றுவருகிறது. ஒருவேளை ஒதுக்கீட்டுஅளவு அதிகரிக்கப்படாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதில் தேசியசராசரியைவிட குறைவாகவே எப்போதும் தமிழகம் இருக்கும்.கடந்த செப்.19-ம் தேதி வரைமத்திய அரசு 3.97 கோடி தடுப்பூசி டோஸ்கள் மற்றும் 2.21 கோடி0.5 மிலி அளவுள்ள ‘ஏடி சிரிஞ்ச்’ ஆகியவற்றை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு 10 மிலி குப்பியில் இருந்தும் அதிக அளவு டோஸ்கள் தடுப்பூசி பெறுவதன் மூலம், கரோனா தடுப்பூசி மையங்களில் 4.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இருப்பினும் போதுமான அளவு தடுப்பூசி பெறப்படாததால், அதிக அளவிலான தகுதியான நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதன்மூலம், தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் பகுதியாகவே தமிழகம் உள்ளது.

மாநிலத்தில் இதுவரை தகுதியான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில், தினசரி தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு தவிர, குறிப்பிட்ட இடைவெளியில் மெகா முகாம்களை தொடர்ந்து நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

எங்களது கணக்கீட்டின்படி, ஒருவாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை தமிழகம் பயன்படுத்தும் திறன் பெற்றுள்ளது. குறிப்பாக தினசரி 5 லட்சம் டோஸ் என 6 நாட்கள் மற்றும் 7-வது நாளில் சிறப்பு முகாமில் 20 லட்சம் டோஸ்கள் என பயன்படுத்த முடியும்.

மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணக்கமாக சென்று, தேவையான தகவல்களை வழங்கி,தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, தமிழகத்துக்கு 50 லட்சம் டோஸ்கள் கரோனா தடுப்பூசி மற்றும் அதற்கேற்ற வகையில் 0.5 மிலி அளவுள்ள ஏடி சிரிஞ்ச் அல்லது ஒரு மிலி, 2 மிலி அளவுள்ள சிரிஞ்ச்களை வாரம்தோறும் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம், 2-வது தவணைதடுப்பூசி செலுத்தப்படுவது தவிர, இதுவரை தடுப்பூசியே செலுத்தப்படாத தகுதியான பொதுமக்களுக்கு அக்.31-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த முடியும். இந்த விஷயத்தில் தாங்கள் விரைவாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x