Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள - 2டிஜி கரோனா மருந்து சந்தைக்கு வருவது எப்போது? : மத்திய அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள 2டிஜி கரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கரோனாவை குணப்படுத்தும் வகையில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ள 2டிஜி மருந்தை உற்பத்தி செய்ய ஒரே ஒரு தனியார் நிறுவனத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்ய அனுமதிவழங்கி, அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் வகையில் விரைவாக சந்தைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி யிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 2டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் 2 நாட்களில் குணமடைந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரானகூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், ‘‘இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள மருந்தை உற்பத்தி செய்வதற்கு, 40 இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்’’ என்றார்.

அப்போது, ‘இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும்,ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து, அரை மணிநேரத்தில் கரோனாவை குணப்படுத்துவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் உடனடியாக அழைத்துப் பேசி உரியஅங்கீகாரம் அளித்து இருக்க வேண்டாமா? சர்வதேச மருந்து மாஃபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்குஉரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா இந்நேரம் சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார்’’ என தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில்,ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதையடுத்து 2டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்தும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் விளக்கம்அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x