Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

புதுச்சேரியின் புதிய ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் : ரங்கசாமியை சந்தித்த பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் தகவல்

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், ரங்கசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன் கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக, போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன்கூட்டணி கட்சியான திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவியிருக்கின்றன.

யாரும் எதிர்பாராத வகையில் இம்முறை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் தோல்விஅடைந்தார்.

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.

தொடர்ந்து ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாகவும், அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிர்மல்குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து கூறினோம். ஓரிரு நாட்களில் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெறும். விரைவில் எங்கள் கூட்டணி அரசு அமையும்’’ என்றார்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கூறும்போது, ‘‘தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூற பாஜக தலைவர்கள் வந்ததாக தெரிவித்தார். மேலும் விரைவில் புதிய அரசு அமையும், இதற்கான தேதி விரைவில் கூறுவோம், வாக்களித்த மக்களுக்கு நன்றி’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x