Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் முக்கியமானது : சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் முக்கியமானது. எனவே, பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் உள்ள நகர்ப்புறசமூக சுகாதார மையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைசுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் ஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. கரோனா தொற்றின் 2-வது அலையில் பல மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக ஒருநாள் தொற்று பாதிப்பு 97 ஆயிரம்பதிவானது. தற்போது 1.85 லட்சமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 6,993 ஆக இருந்துள்ளது. தமிழகத்திலும் தொற்றுபாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வரும்நாட்களில் தொற்று அதிகரிக்கும்.தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.போர்க்கால அடிப்படையில் படுக்கைகள் தயாராகி வருகின்றன.

தமிழகம் முழுவதும் ஆக்ஸிஜன்வசதியுடன் கூடிய 32,198 படுக்கைகள், 7,047 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 6,517 வெண்டிலேட்டர் கருவிகள் மற்றும் 1.45 லட்சம் ரெம்டிசிவர் மருந்து கையிருப்பில் உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 54.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 40.99 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்த 2 வாரம் மிகவும் முக்கியமானது. எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தாலே தொற்று குறையத் தொடங்கி விடும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் விதடுப்பூசியும் விரைவில் வரவுள்ளது.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழிப்புணர்வு வாகனங்கள்

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத் துறைச் செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது,அவர் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக போட வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்யக்கூடியவர்கள் வீட்டில் இருந்தே பணிகளை செய்யலாம். மத்திய அரசின் திட்டங்களின் கீழ் 22 வாகனங்களில் 18 வாகனங்கள் மாவட்டங்களுக்கும், 4 வாகனங்கள் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்துகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்தது. எனவே, அனைத்து இந்திய மருத்துவத்தையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் 95ஆயிரம் பேருக்கு சோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x